(இ - ள்.) திரைத்த சாலிகை நிரைத்தபோல் - சுருக்கிய கவசங்களை இட்டாற் போன்று (பொழிலிடத்தே), தேன்கள் - அளிகள், நிரந்து - பரவி மொய்த்து, இரைப்ப - இசைபாடுவனவாம். விரைக்கொள் மாலையாய் - மணமாலையணிந்த இளைஞனே, (எ - று.) கரிய கவசமிட்டாற் போன்று கருநிற வண்டுகள் நெருங்கி மொய்த்து ஆரவரித்தலைக் காண் என்றான் என்க. |
(இ - ள்.) வரைவாய் - மலையின்கண், நிவந்த - நின்றுயர்ந்த, வடுமா - பிஞ்சுகளையுடைய மாமரங்கள், நிவந்துவிரியா - ஓங்கித் தழைத்து விரிந்து, புலரா - விடிதலில்லாத, இரவாய் - இராக்காலம்போலவே, இருள்செய் - இருளைச் செய்கின்ற, இடமே - இடங்கள், விரியாபுரைவாய் - அகற்சி யில்லாத சிறிய ஊற்றுத் தொளைகளிடத்தே, அசும்பு புலரா - நீர் உறுதல் ஒழியாததும், அடுமா - கொலைத் தொழிலைச் செய்யும் காட்டு விலங்குகள், விரைவாய் - விரைவுடையனவாய், மேயிடம் - மேயும் இடமாகும் (எ - று.) மாமரங்கள் தழைத்து இராக்காலம் போன்று பகலினும் இருள் செய்யும் இடமெல்லாம், இருளில் வழங்கும் காட்டுவிலங்குகள் இரவென்றே கருதி வழங்கா நிற்கும் என்பதாம். |