பக்கம் : 51
 

குறிப்பின் அல்லது - குறிப்பைத் தெரிந்து கொண்டால் அல்லாமல்; இது நமக்கு இசைக்க
என - இதை நாம் சொல்வோமென்று; எண்ணும் எண்ணிலார் - எண்ணுகின்ற எண்ணத்தை
யுடையவர்களல்லர்; நொதுமலர் வெருவுறா - அயலார்கள் அஞ்சுதலில்லாத; நுவற்சியாளர் -
சொல்லையுடையவர்கள். (எ - று.)

     பயாபதி மன்னன் தன்னுடைய அமைச்சர் படைத்தலைவர் முதலாயினார்
செய்யவேண்டியவைகளைக் குறிப்பினாற் புலப்படுத்துவன். அவ்வாறு குறிப்பினால்
தெரிவியா தொழியின் அவர்கள் தம் விருப்பப்படி யாதினையும் புரியார். சொல்லார்.
எச்செயலினையும் அரசன் குறிப்பை யறிந்து கொண்டு அவன் கூறுதற்கு முன்னரே செய்து
முடிப்பர்; அயலவர் அஞ்சுதற்கு இடனில்லாத சொல்லையுடையவர். கொதித்தல் பகைவரைச்
சினத்தலுமாம். நொதுமலர் - பகைவரும் நண்பரும் அல்லாத அயலார்.

( 23 )

அரசியர்

59. மற்றவன் றேவியர் மகர வார்குழைக்
கொற்றவர் குலங்களை 1விளக்கத் தோன்றினார்
இற்றதிம் மருங்குலென் 2றிரங்க வீங்கிய
முற்றுறா முலையினார் கலையின் 3முற்றியார்.
 
     (இ - ள்.) அவன் தேவியர் - அந்தப் பயாபதி மன்னனுடைய மனைவியர்; மகரவார்
குழை - மகரமீன் வடிவாகச் செய்யப்பட்ட நீண்ட குண்டலங்களையணிந்தவர்கள்;
கொற்றவர் குலங்களை - தாம் பிறந்த குடியையும் புகுந்த குடியையும்;
விளக்கத்தோன்றினார் - சீர்த்தி விளங்கும் படியாகச் செய்யப் பிறந்தவர்கள்; இம்மருங்குல்
இற்றது என்று இரங்க - கண்டவர்கள் இவ்விடையானது ஒடிந்துபோய்விட்டது என்று
கூறிவருந்து மாறு; வீங்கிய - பருத்துள்ள, முற்றுறா முலையினார் - இளங்கொங்கைகளை
யுடையவர்கள்; கலையின் முற்றியார் - மகளிர்க்குரிய கலைகளில் முதிர்ச்சி பெற்றவர்கள்.
(எ - று.)

     மற்று - அரசனையும் தேவியரையும் பிரித்து நிற்கிறபடியால் பிரிநிலைக்கண்வந்தது.
காதணிகளை மகரமீன் வடிவாகச் செய்தல் பண்டைநாள் வழக்கு. மருங்குல் இற்றது என்று
கூறுமாறு பருத்த கொங்கைகள் என்புழி முதிர்ந்தவைகளோ என்னும் ஐயமேற்படா
திருத்தற்கு முற்றுறா என்னும்
 

     (பாடம்) 1. விளங்க, 2. இரங்கி, 3. முற்றியர்.