மக்களாகிய, வனப்பின் மிக்கார்க்கு - அரசிலக்கணம் முதலிய எல்லா அழகுகளானும் மிகுந்தவர்க்கு, ஐயா! - ஐயனே!, அதனிற்பிறிது அறம் உண்டோ - அதனின் உயரிய அறம் வேறு உண்டு கொல்! (இல்லை என்றபடி) (எ - று.) உலகில் வாழும் பிறவுயிர்கட்கு இடுக்கண் நேர்ந்துழித்தம் வாழ்க்கையை மதித்தொதுங்காது, அவற்றின் இடுக்கண் களைந்து காக்கவே முற்படுவர் ஆண்மையாளர்; மேலும் அரசர் குடிப்பிறந்தோர்க்கு இது தலைக்கடன் ஆகும்; அரசற்கு இதனிற் சிறந்த அறம் பிறிதில்லை என்று நம்பியைப் பாராட்டினான் என்க. |
(இ - ள்.) பெற்ற இவ் உடம்பு - அரிதிற் பெற்றுடைய இம்மானிட யாக்கை, கற்றவர் - மெய்ந்நூல்களை ஓதியுயர்ந்தோர், கடவுள் தானம் சேர்ந்தவர் - மெய்ப்பொருளின்றன்மையை இவ்வுடம்பினின்றே எய்தினவர், களைகணில்லார் - தமக்குக் களைகணாவாரை யில்லாதவர், அற்றவர் - ஏழைகள், அந்தணாளர் - அந்தணர்கள், அன்றியும் அனைய நீரார்க்கு - அல்லாமலும் இன்னோரன்ன பிறர்க்கும், உற்றதோர் இடுக்கண் வந்தால் - பொருந்திய இடையூறு வந்தபொழுது, உதவுதற்கு உரியது - விரைந்து அவ்விடையூறு களைந்து அவர்க்கு உதவி செய்தற்கே உரியதாம், அன்று ஆயில் - அங்ஙனம் உதவுதலின்றானால், இவ்வுடம்பு தன்னாற் பெறுபயன் இல்லை - இம்மானிடயாக்கையாற் கொள்ளக் கிடந்த பயன் பிறிதொன்று இல்லையாம், (எ - று.) மானிட உடல், கற்றவர் கடவுட்டானம் சேர்ந்தவர் களைகணில்லார் அற்றவர் அந்தணாளராகிய இன்னோரன்னார்க்கு உதவி செய்தற்கே உரித்தாம்; அவ்வுதவி செய்யாவழி இதனைப் பெற்றிலாதவரே ஆவர் என்க. கடவுட்டானம் - மித்தியாதிருட்டி முதலிய பதினாக்கு குணத்தானங்களில் ஆறுமுதம் பன்னிரண்டு வரையுள்ள குணத்தானங்கள் என்க. இவை துறவிகட்குரியன ஆதலால் கடவுட்டானம் என்றார். |