பக்கம் : 520
 

     நன்மையின்கண் நிலைபெற்று உயர்ந்தோர் புகழும்படி, சிறந்து பின்னிற்கும் அன்றே -
சிறப்புற்றுப் பின்னர் எக்காலத்தும் அழிவின்றி நிலைத்து நிற்கும் இயல்பிற்று. (எ - று.)

     ஒரு மனிதனுக்கு ஊனுடல் என்றும் புகழுடல் என்றும் இரு வேறுடல்கள் உள்ளன,
அவற்றுள் முன்னையது ஊழ்தரவந்தது; அஃது அழிந்தொழியும்; மற்றொன்றோ தானே
தேடிக்கொள்வதாம்; அஃது அழியாமல் நின்று நிலவும் என்றான் என்க. ஒன்று ஊழ்காத்து
வந்த தென்றலின் மற்றொன்று தான் தேடவந்த தென்றாம்.
 

( 204 )

வேறு
விசயதிவிட்டர்கள் குறிஞ்சி நிலங்கடந்து
பாலைநிலம் எய்துதல்
777.

என்று தங்கதை யோடிரு நீண்முகிற்
குன்று சூழ்ந்த 1குழுமலர்க் கானகம்
சென்றொர் வெங்கடஞ் சேர்ந்தன ருச்சிமே
னின்று வெய்யவ னுநிலங் காய்த்தினான்.
 

      (இ - ள்.) என்று தம் கதையோடு- என்றிவ்வாறு தம் சொல்லாடு தலோடு, இரு
நீண்முகில்குன்று சூழ்ந்த, பெரிய நீளிதாய முகில் தவழும் குன்றுகளாற் சூழப்பட்ட - குழு
மலர்க்கானகம் சென்று - நிறைந்த மலர்களையுடைய காட்டைக்கடந்து போய், ஓர்
வெங்கடம் சேர்ந்தனர் - ஒரு வெப்பமிக்க பாலை நிலத்தை எய்தினர், உச்சிமேல் நின்று
வெய்யவனும் - அப்பொழுது வானத்துச்சிக்கண் நின்று கதிரவனும், நிலங்காய்த்தினான் -
மேலும் அப்பாலை நிலத்தை வெதும்பச் செய்தான்.

     என்றிவ்வாறு உரை நிகழ்த்தியவாறே விசயதிவிட்டர், ஒரு கொடிய பாலையை
எய்தினர்; அப்போது ஞாயிறும் உச்சியினின்று உலகத்தை வெதுப்பினன் என்க.
 

( 205 )

இதுமுதல் எட்டுச் செய்யுள் ஒருதொடர் விசயன் பாலைநிலத்தின் தன்மையை எடுத்தியம்புதல்

778.

ஆங்கவ் வெங்கஞ் சேர்ந்த 2பினையகா
ணீங்கிவ் வெங்கடுங் கானகத் தீடென
ஏங்கு நீர்க்கடல் வண்ணனுக் கின்னணம்
வீங்கு வெண்டிரை வண்ணன் விளம்பினான்.
 

     (இ - ள்.) ஆங்கு அவ் வெங்கடம் சேர்ந்தபின் - அங்ஙனமாக அந்தப்
பாலைநிலத்தை அடைந்த பின்பு, ஐயகாண் - ஐயனே காண்பாயாக!
 


     (பாடம்) 1. குலமலர்க். 2. பினையர்காள்.