பக்கம் : 522
 

    மூங்கிலின் நெற்கள் வெப்பத்தாலே உதிர்ந்து கற்றலத்தின் மிசை வீழ்ந்து பொரிந்து
துடிக்கின்றன என்க.
 

( 208 )

 
781.

ஈங்கு வெங்கதி ரோனெ 1றிப்பநிழல்
வேங்கொ லென்றொளித் திட்டிபம் வீழ்ந்துசேர்
பாங்க லார்மனை போலப் பறைந்தரோ
ஓங்கி நின்றுல வுற்றன வோமையே.
 

     (இ - ள்.) ஈங்கு - இப்பாலைக்காட்டில், வெங்கதிரோன் எறிப்ப - வெவ்விய ஞாயிறு
காய்தலாலே, நிழல்வேம் கொல் என்று ஒளித்திட்டு - நிழல் நாம் வெந்தொழிவேம் கொல்
என்று அஞ்சி ஒளிப்பவும், இபம் வீழ்ந்து - யானைகள் நீர் பெறாது வீழ்ந்துயங்கவும், சேர்
பாங்கு அலார்மனைபோல - அயலார் விரும்பிச் சேர்தற்குரிய பண்பிலாத மாக்கள்தம்
இல்லங்களைப்போல, பறைந்து - அழிந்து, ஓமை - ஓமையென்னும் மரங்கள் மட்டும், நின்று
உலவுற்றன - நிலைத்து நின்று வற்றின, (எ - று.)

     அப்பாலைக் காட்டின்கண் இனியிருப்பில் யாம் வெந்தொழிவேம் என்று அஞ்சி
நிழல்கள் ஓடிஒளித்தன. யானைகள் வெப்பம் பொறாது விழுந்து புரள்வன, ஓமைகள்மட்டும்
தம்பால் வந்தார்க்கு உதவாத புல்லியர் இல்லம்போல் ஒதுங்கும் நிழலின்றி வற்றி உலர்ந்து
நின்றன என்க.
 

( 209 )

வேறு

782.

அற்ற நீரழு வத்திடை நெல்லியின்
வற்ற லஞ்சினை யூடு வலித்தரோ
மற்ற வெவ்வெயி லுந்நிழல் வாயழ
லுற்று விழ்ந்தது போன்றுள 2வாங்கெலாம்.
 

     (இ - ள்.) நீர்அற்ற அழுவத்திடை - நீர் வறந்து ஒழிந்த அப்பாலையில், நெல்லியின்
வற்றல் அஞ்சினை - நெல்லிமரத்தினது உலர்ந்து வற்றிப்போன கிளைகளின்,
ஊடுவலித்தரோ - ஊடே சென்று, மற்ற வெவ் வெயிலும் - நிலத்தே படிந்த அவ்வெவ்விய
வெயில், நிழல்வாய் அழல் உற்று வீழ்ந்தது போன்றுள - நெருப்பும் அப்பாலையின்
வெப்பத்தை அஞ்சி அந்நெல்லியின் சினை நிழலை விரும்பி அங்குச் சென்று வீழ்ந்து கிடப்
பதைப்போன்று தோன்றிற்று, ஆங்கெலாம் - அவ்விடத்தில் எல்லாம்,(எ - று.)
நெல்லிமரத்தின் உலர்ந்த கிளைகளினூடே பாய்ந்து நிலத்திற் படிந்த வெயில், நிழலைவிரும்பி நெருப்பு அம் மரத்தடியின்கீழ் வீழ்ந்த கிடப்பதுபோலத் தோன்றிற்று என்பதாம். (210)
 


     (பாடம்) 1. றிப்பந் நிழல். 2. பாங்கெலாம்.