(இ - ள்.) துடியர் - உடுக்கையையுடையவரும், தொண்டகப் பாணியர் - தொண்டகப்பறையை முழக்கும் கையினரும், வாளியர் - அம்பு, வில் முதலிய படைக்கலங்களை யுடையவரும், கடிய செய்து - ஆறலைத்தன் முதலிய கொடிய தொழில்களைச் செய்து, முனைப்புலம் கூட்டுணும் - செருக்களத்திற் கிடைத்த பொருள்களைக் கூடி உண்பவரும், கடிய நீர்மையர் - தறுகண்மை முதலிய கடுமையான பண்புடையோரும், கானகங் காக்கும் - நின் ஏவலால் இக்கானகத்தைக் காவல் செய்குநரும் ஆகிய, நின் அடியர் அல்லது அல்லார் - உன்னுடைய அடிமையாவர் அன்றி அல்லாத வேறு பிறர், அவண் இல்லை - அக்கடுஞ்சுரத்தில் வாழுநர் இல்லை, (எ - று.) “முல்லையும் குறிஞ்சியும் முறைமையிற் றிரிந்து நல்லியல் பழிந்து நடுங்கு துயருறுத்தும் என்பவாகலின், இது குறிஞ்சிதிரிந்த பாலையெனக் கொள்க; அற்றாகலினன்றே குறிஞ்சிக்குரிய தொண்டகப்பறை கூறியதூஉம், என்க. |
(இ - ள்.) அங்கு அ வெங்கடம் கடந்து - அவ்விடத்துள்ள அப்பாலை நிலத்தினைக் கடந்துபோய்; அலங்குதார் இலங்கு பூண் - அசைகின்ற மாலையையும் விளங்கும் அணிகலன்களையும் உடைய, சிங்கம் வென்ற செங்கண் மாலொடு - சிங்கத்தைப் பிளந்துகொன்ற செங்கண் மாலாகிய திவிட்டனுடனே, அம்பொன்மாலை - அழகிய பொன் மாலையணிந்த, திங்கள் வண்ணன் - விசயன் என்பான், வெண்கடாம் வெங்கண் யானை வேந்து - வெண்மையான மதநீரைப் பொழிகின்ற வெவ்விய யானைப் படைமிக்க பயாபதி வேந்தன், சேர்ந்த - வதிகின்ற, நாடுசார்ந்து - சிறந்த நாட்டை எய்தி, இங்கண் இன்ன இன்ன காண் என - இவ்விடத்தே இன்னின்ன காட்சிகளைக் காண்பாயாக என்று, இயம்பினான் - திவிட்டனுக்குக் கூறுவானாயினான். |