பக்கம் : 531
 

     கார் துளித்தலாலும் தருப்பையிருத்தலாலும் பூந்தாதுகள் சிந்தப் பெறுதலாலும்
யாகசாலையை ஒக்கும் என்க.
 

( 225 )

 

798.

கறவைகன்று வாய்மிகுத்த வமிழ்தினோடு கண்ணகன்
புறவின்மாம ரைம்முலைப் பொழிந்தபா றெகிழ்ந்தெழப்
பறவையுண்டு பாடவும் 1பால்பரந்த 2பூமியி
னறவுவிண்ட நாகுமுல்லை வாய்திறந்து நக்கவே.
 

      (இ - ள்.) கறவைகன்று வாய்மிகுத்த - கறவைப் பசுக்கள் தம் கன்றுகளை வாயின்
ஊட்டிய பின்னர் மிக்குச் சொரிந்த, அமிழ்தினோடு - தீம்பாலாகிய அமிழ்தத்தோடே,
கண்அகன் புறவின் - இடம் அகன்ற முல்லை நிலத்தின்மேல், மாமரைமுலைப்
பொழிந்தபால் - பெரிய மரைகள் தம் முலைகள் சுரந்து விம்மிப் பொழிந்த பாலும்,
நெகிழ்ந்து எழ - பெருகி ஓட, பறவையுண்டு - பறவைகள் அப்பாலைப் பருகி, பாடவும் -
பாடாநிற்பவும், பால் பரந்த பூமியின் - அப்பால் பரவிய அந்நிலத்தின்மேல், நறவு விண்ட
நாகுமுல்லை - தேனைப்பொழிந்த, இளமைமிக்க முல்லைகள், வாய்திறந்து நக்கவே - தம்
மலர்வாய் திறந்து முறு வலித்தன, (எ - று.)

     ஆன்களின் கன்றுண்டெஞ்சிய பாலோடே, மரைகளின் பாலும் கலந்து பெருகி
ஓடாநிற்ப, அப்பாலைப் பறவைகள் பருகி மகிழ்ந்து பாட, அப்பாலோடே முல்லைக்
கொடிகள் தம் தேனையும் கலந்து, (பாலோடு தேனும் கலந்துண்டு பாடுக பறவையீர்! என்று
மகிழ்ச்சியாலே) சிரித்தன என்க.
 

( 226 )

விசயதிவிட்டர் முல்லைநிலங்கடந்து மருதநிலம் எய்துதல்

799.

வேரல்வேலி மால்வரைக் கவானின்வேய் விலங்கலிற்
சாரன்மேக நீர்முதிர்ந்து 3தண்டளிது ளித்தலால்
மூரல்வா யசும்பறாத முல்லைவிள்ளு மெல்லைபோய்
நீரவாளை பூவின்வைகு நீள்பரப்பு நண்ணினார்.
 

     (இ - ள்.) வேரல் வேலி மால்வரை - குறும்புதல்களை வேலியாக வுடைய பெரிய
மலைகளின், கவானின் - பக்கங்களினும், வேய்விலங்கலில் - மூங்கில்கள் செறிந்த
மலைகளினும், சாரல் மேகம் - சார்தலுடைய முகில்கள், நீர் முதிர்ந்து - நீரான்மிகுந்து,
தண் துளி - குளிர்ந்த மழைத்துளிகளை, துளித்தலால் - பெய்தலால், மூரல்வாய் அசும்பு
அறாத முல்லை - பற்கள் போன்ற அரும்புகளில் தேன்றுளித்தல் அறாத முல்லைகள்,
விள்ளும் எல்லைபோய் - மலர்கின்ற முல்லைநிலத்தைக் கடந்து சென்று, நீரவாளை -
 


     (பாடம்) 1. பருகி மந்தியாடவும். 2. பூமிநின். 3. தண்டுளிதளித்தலான்.