பக்கம் : 538
 

தழையையும் அடி ஒளியையும் ஆடையையும் பன்மலர் மாலையையும், தாமரையாகிய
கையையும், திருமேனி ஒளியையும் உடையளாய், திருமகள் போன்று தாமரை அல்லியிடை
வதியும், மருதநில மடந்தையின் அகத்தே தோன்றும் ஒளிவட்டம் (நமது மாநகர் என்று
முடித்துக்கொள்க. அடுத்த செய்யுள்)
 

( 239 )

 
812.

மதிகா ணநிமர்ந் தமதிற் சிகர
நுதிமா ளிகைமேல நுடங் குகொடி
கதிரோ னொளிமாழ் கவெழுந் துகலந்
ததுகா ணமதா ரொளிமா நகரே.
 

      (இ - ள்.) மதிகாண நிமிர்ந்த மதில் - திங்கள் மண்டிலத்தைக்காண எழுந்தாற்
போன்று உயர்ந்த மதில்களையுடையதாய், மாளிகைச்சிகரம் நுதிமேல நுடங்குகொடி -
மாளிகைகளின் உச்சிமேலவாய்க் கட்டப்பட்டு ஆடுதலையுடைய கொடி, கதிரோன் ஒளிமாழ்க
- ஞாயிற்றின் ஒளி மழுங்குபடி, எழுந்து கலந்தது காண் - உயர்ந்தெழுந்து அதன்
ஒளியோடு கலந்ததனைக் காண்க, நமது ஆர்ஒளி மாநகர் - அங்ஙனம் தோன்றுவது
நம்முடைய பேரொளியையுடைய பெரிய போதனமா நகரமாகும்.
மதிகாண நிமிர்ந்த சிகரத்தோடே, கொடியோடே மாழ்க எழுந்து கலந்தது நமது நகர் காண்
என்க.
 

( 240 )

 
813.

அறவே திய 1ரா குதியம் புகையார்
உறவே திகைவிம் மியவொண் புறவ
நிறவே திகைமீ துநிமிர்ந் தபொழிற்
புறவே திகையே றுவகாண் புகழோய்.

     (இ - ள்.) புகழோய் - புகழுடைய திவிட்டனே!, அறவேதியர் - அறந்தவறாத
அந்தணர் இயற்றிய, ஆகுதி அம்புகை - வேள்வியினின் றெழுந்த அழகிய புகை, ஆர்வுற -
நிரம்புதலானே, வேதிகை - ஆண்டுள்ள வேதிகைகளில் உறைந்த, விம்மிய - மூச்சு முட்டிய,
ஒண் புறவம் - ஒளியுடைய புறாக்கள், நிறவேதிகை மீது - வண்ணந் தீட்டப்பட்ட
அவ்வேள்வி மேடைக்குமேல், நிமிர்ந்த பொழிற் புறவேதிகை - ஓங்கிவளர்ந்துள்ள
பூம் பொழிலின் புறத்தேயுள்ள வேதிகைகளிலே, ஏறுவகாண் - குடி ஏறுதலைக் காண்பாயாக,
(எ - று.)

     வேதியருடைய ஆகுதிப் புகையாலே விம்மிய புறவுகள் பொழிலின் புறத்தேயுள்ள
வேதிகைகளிலே ஏறுதலைக் காண் என்றான் என்க.
     புறவுகள் - வேதிகையில் வாழுமியல்புடையன! வேதிகை - மேடை.
 

( 241 )

     (பாடம்) 1. ராவுதியம்.