பக்கம் : 539
 

விசய திவிட்டர் போதனமாநகர் புகுதல்

814.

இன்னன விளையவற் கியம்பு மெல்லையுட்
பொன்னக ரடைந்தனர் பொழுதுஞ் சென்றது
நன்னக ரிரைத்தது நரன்ற வின்னிய
மன்னவ குமரரும் வறுமை நீங்கினார். 
 

      (இ - ள்.) இன்னன இளையவற்கு இயம்பும் எல்லையுள் - இவை இவை
திவிட்டனுக்கு விசயன் எடுத்தியம்பிவரும்பொழுது, பொன்னகர் அடைந்தனர் - அழகிய
போதன நகரத்தை இருவரும் அடைந்தனர், பொழுதும் சென்றது - பகற்பொழுதும்
முடிவுற்றது, நன்னகர் இரைத்தது - இவர்கள் வருகையை அறிந்த சிறந்த நகரமாந்தர்
மகிழ்ச்சியாற் கூடி ஆரவாரித்தனர், இன்இயம் நரன்ற - இனிய இசைக் கருவிகள் முழங்கின,
மன்னவ குமரரும் வறுமை நீங்கினர், அரசகுமாரர்களாகிய விசய திவிட்டரும் நல்குரவு
ஒழியப் பெற்றனர், (எ - று.)

     வறுமையாவது - நகரின் நிங்கியதால் அதனை மீண்டும் அடைதற்கெழுந்த உள்ள
நசை.

     இவ்வாறு விசயன் கூறிவருமளவில் இருவரும் நகரத்தை எய்தினர்; அப்பொழுது
ஞாயிறு மறைந்தது; நகரம் ஆரவாரித்தது, இயம் முழங்கின; இவற்றைக் கேட்டு நம்பிமார் வறுமை நீங்கினார் என்க.
 

( 242 )

 
815.

இளங்களிக் குஞ்சர மிரட்டித் தாயிரம்
துளங்கொளிக் 1கலினமாத் தூளி யெல்லைய
வளங்கெழு குமரரை வலங்கொண் டெய்தின
2அளந்தறிந் திலமகன் படையி னெல்லையே.
 

     (இ - ள்.) வளங்கெழு குமரரை வலங்கொண்டு எய்தின - எழில் ஆற்றல் முதலிய
வளமனைத்தும் நிறைந்துள்ள அவ்வரச மக்களை எதிர்கொண்டு நகர் வலமாக
அழைத்துச்சென்றவை, இளங்களிக் குஞ்சரம் - இளமையுடைய செருக்குற்ற யானைகள்,
இரட்டித்தாயிரம் - இரண்டாயிர மாம், துளங்கு ஒளிக்கலினமா - திகழும் ஒளியையுடைய
கடிவாளமிட்ட குதிரைகள், தூளி எல்லைய - துகள்கள் எத்தனை அத்தனை,
அதன்படையின் எல்லை - விரிந்த அக் குதிரை தேர் ஆள் ஆகிய மூவகைப் படையின்
அளவினை, அளந்து அறிந்திலம் - அளவைகளால் யாம் அளந்து கண்டோமில்லை,
(அளவிறந்தன என்றபடி.) (எ - று.)
 


     (பாடம்) 1 கவனமா. 2. அளவறிந்து வளந்தறி நிலமகன். 2 ஆவது அடிக்கு “குதிரையின் ஆர்ப்பு“ என்றொரு குறிப்புக் காணப்படுகிறது.