பக்கம் : 547
 

     அரசனுடைய திறம் - செய்தியை, இனி விளம்பல் உற்றேன் - இனிக் கூறத்
தொடங்குகின்றேன், (எ - று.)

     நம்பி அரிமாவைக் கொன்று மீண்டமை யுரைத்தாம்; இனி, அவற்குரிமையுடைய
நங்கையை யீன்ற சடிமன்னன் செய்தியை உரைக்கத் தொடங்குகின்றோம்; என்று தேவர்
தோற்றுவாய் செய்தனர் என்க.

     மாற்குரிய நங்கை தாதை என்றது, சடிமன்னன் தன்மகளை நம்பிக்கு மணஞ்செய்து
கொடுத்த திறம் என்றதை விளக்கம் குறிப்பேதுவாக நின்றது என்க.
 

( 1 )

திவிட்டன் அரிமாவைக் கொன்ற செய்தியை
ஒற்றனாலறிந்த சடிமன்னன் மகிழ்தல்
828.

உற்றவான் குழவித் திங்க ளொளிமுழை யகட்டுப் போந்து
முற்றுவான் முளைத்த போலு மெயிறுடை மூரிச் சிங்கம்
மற்றம்மா லழித்த தெல்லாம் வானமா றாகச் 1சென்ற
ஒற்றனா லுணர்ந்து வேந்த னுவகையங் கடலு ளாழ்ந்தான்.
 

      (இ - ள்.) வான்உற்ற குழவித்திங்கள் - விசும்பிற்பொருந்திய பிறைத்திங்கள், முழை
அகட்டுப்போந்து - குகையின் வயிற்றுள் புகுந்து, ஒளிமுற்றுவான் - ஒளிமுதிரும் பொருட்டு,
முளைத்தபோலும் - இரண்டுருவாக முளைத்ததைப் போன்ற, எயிறு உடைமூரிச் சிங்கம் -
பற்களையுடைய பெரிய சிங்கத்தை, மற்று அம்மால் அழித்தது எல்லாம் - அத்திவிட்டன்
கொன்ற வரலாற்றை எல்லாம், வானம் ஆறாகச் சென்ற - விசும்பு வழியாகப் போன,
ஒற்றனால் உணர்ந்து - தன் ஒற்றன் ஒருவனால் அறிந்து கொண்டு, வேந்தன் - சடிமன்னன்,
உவகையங்கடலுள் ஆழ்ந்தான் - இன்பக்கடலுள் மூழ்கினான், (எ - று.)

     சடிமன்னனால் ஏவப்பெற்ற ஒற்றன் திவிட்டநம்பி அரிமாவைப் பிளந்து கொன்ற
செய்தியை அறிந்து வந்து சடிமன்னனுக்குக் கூறச் சடி மிகவும் மகிழ்ந்தான் என்க.
 

( 2 )

சடிமன்னன் தன்மகள் சுயம்பிரபையைத்
திவிட்டனுக்கு மணஞ்செய்விக்கத் தொடங்குதல்
829.

கரியவாய் விலங்கி நீண்டு களிக்கய லிரண்டு தம்முட்
2பொரியபோ கின்ற போலும் பொங்கரித் தடங்கட் பேதைக்
குரியமா லவற்குச் சென்று கொடுப்பனென் றுலகங் காக்கும்
பெரியவன் றமரோ டெண்ணிக் கடிவினை பெருக்க லுற்றான்.
 

    


     (பாடம்) 1. சென்றொ ரொற்றனா. 2. பொருவ.