கின்னரப் பறவைகளைக் கட்டுதலைச் செய்யும், செய்கை - செயலையுடைய, கிருதமாதனத்தைக் காப்பான் - கிருதமாதனத்தைக் காவல்செய்வான், கை நவின்று இலங்கும் செவ்வேற் காவலன் - கையிடத்தே பொருந்தி விளங்கும் செவ்விய வேலையுடைய அரசன், கருடன் சேர்ந்த - கருடன் என்னும் சொல் சேர்ந்த, மெய் நவின்று இலங்கும் செம்பொன் - உடலிடத்தே பொருந்தித் திகழும் செவ்விய பொன்னாலியன்ற, அங்கதம் - அங்கதம் என்னும் சொல், விளைத்தபேரான் - தோற்றுவித்த கருடாங்கதன் என்னும் பெயருடையானும், (எ - று.) அங்கதம் - தோள்வளை. கருடன் சேர்ந்த அங்கதம் விளைத்த பேர். கருடாங்கதன் என்பதாம். கிருத மாதனத்து மன்னனும் வெவ்வேலுடை யோனும் ஆகிய கருடாங்கதனும் என்க. |
(இ - ள்.) ஓங்கும் நீர்ப்புரிசை வேலி-மிக்க நீரையுடைய அகழியையும் மதில்களையும் வேலியாகவுடையதும், ஒண்துறை - ஒள்ளிய துறைகளை யுடைத்தாய், குவளை வேய்ந்த - குவளை மலர்கள் மூடப்பெற்ற, தூங்குநீர் உடுத்த - நிலையுற்ற நீர் சூழ்ந்த, பாங்கில் - பக்க நிலங்களையுடையதும் ஆகிய, சோபனம் உடைய தோன்றல் - சோபனம் என்னும் நகரத்தையுடைய அரசனும், இவ்வையம் தாங்கும்நீர் - இவ்வுலகம் முழுதையும் ஓம்புகின்ற தன்மையுடையதோர், ஒளியோடு ஒன்றி - புகழொடு பொருந்தி, தண்ணளி தயங்க - குளிர்ந்த அருளுடைமைதிகழ, நின்றான் - நிலைத்து நின்றவனும், தேங்குநீர்க் கடலந்தானை - நீர்மிக்குத் தேங்கிய கடல்போலும் பெருக்க முடைய படைகளையுடையவனும் ஆகிய, சித்திரதரன் - சித்திரதரன் என்பானும், (எ - று.) சோபன நகரத்து மன்னனும், தண்ணளியோனும், கடலந்தானையை யுடையயோனும் ஆகிய சித்திரதரனும், என்க. |