பக்கம் : 555
 

     (இ - ள்.) மணித்தொழில் - மணிகளாற் செய்த தொழிற் சிறப்புடைய, வளைந்த
சூட்டின - வளைந்தவடிவமுடைய சூட்டினையும், மருப்பு அறுத்து இயற்றப்பட்ட -
யானைக்கோடுகளை அறுத்துக் கலைத்திறம் விளங்கச்செய்த, அணித்தொழில் ஆரக் கோவை
- தொழில் நுணுக்கமுடைய அழகிய மணிவடங்களையும் ஆடகம் கொடிஞ்சி -
பொன்னாலியன்ற கொடிஞ்சி களையும், அம் பொன்துணித்துச் சுடர்மணி இடைபதித்த
தட்டின் - அழகிய பொன் துண்டித்துச் சுடருடைய மணிகளையும் இடையிடையே
பதித்தியற்றிய தட்டுக்களையும், துரகம் - குதிரைகளையுமுடைய, திண்டேர் - திண்ணியவாய
தேர்கள், கணித்து அளப்பரிய நீர - இத்துணைய என எண்ணி அளவிடற் கியலாதபடி மிக்க
தன்மையை யுடையனவாய், கல்லெனக் கலந்த - ‘கல்‘ என ஒலித்துக் கூடின, (எ - று.)

     தட்டு தேர்த்தட்டு, கொடிஞ்சி தாமரைமுகை வடிவிற்றாய்ச் செய்து தட்டின்முன்
நடுவதாய ஓர் உறுப்பு, சூட்டு - சக்கரத்தைச் சூழஇடும் கட்டு, இது தேர் பண்ணுறுத்தமை
கூறிற்று.
 

( 15 )

மறவர்களின் பண்பாடு
842.

ஒட்டிய 1கலிங்கத் தாண்மேற் றிரைத்துடுத் துருவக் கோடிப்
பட்டிகை பதைப்ப யாத்துப் பரட்டைய நரல வீக்கிக்
கட்டிய கழலர் தாரர் கதிரொடு கனலும் வாளர்
மட்டுய ரலங்கல் சூடி மறங்கிளர் மள்ளர் சூழ்ந்தார்.
 

      (இ - ள்.) தாள்மேல் ஒட்டிய கலிங்கம் திரைத்து உடுத்து - கால்களின் மேல்
ஒட்டப்பட்டதுபோல் பொருந்திய ஆடையைத் திரைத்துக்கட்டி, உருவம் கோடிப் பட்டிகை
பதைப்ப யாத்து - அழகிய விளிம்புகளையுடைய அரைக்கச்சினை அசையக் கட்டி,
பரட்டையம் நரலவீக்கி - பரட்டையம் என்னும் ஒட்டுச்சல்லடத்தை ஆரவாரிக்கும்படி கட்டி,
கட்டிய கழலர் - வீரக்கழலணிந்தவராய், தாரர் - பூமாலையணிந்தவராய், கதிரொடு
கனலும் வாளர் - ஒளி வீசிச் சினக்கும் வாள் ஏந்தியவராய், மட்டுயர் அலங்கல் சூடி, தேன்
மிக்க மாலைகளைப் புனைந்து, மறங்கிளர் மள்ளர் - வலிமைமிக்க போர்மறவர், சூழ்ந்தார் -
வந்து குழீஇயினர், (எ - று.)

     பரட்டையம் - தொடுதோல் என்பாருமுளர், கலிங்கந் திரைத்துடுத்து, பட்டிகை யாத்து,
பரட்டையம், நரலவீக்கி, கழலர், தாரர், வாளராய் மள்ளர் சூழ்ந்தார், என்க.
கோடிப்பட்டிகை - புதுப்பட்டிகையுமாம், பட்டிகை - அரைக் கச்சு
 

( 16 )

சடியின் தம்பியாகிய சுவலன ரதன் வருகை
843.

இன்னிசை யமரர் பேர்கொண் டியன்றமா நகரங் காக்கும்
பொன்னவில் கடகப் பைம்பூட் புரந்தர னனைய மாண்பின்
மன்னவற் கிளைய வேந்தள் வயங்கெரிப் பெயர்கொ டேரான்
கன்னியைக் காக்கு நீர்மைக் கடற்படை பரப்பிச் சென்றான்.

 


     (பாடம்) 1. கலங்கங்.