(இ - ள்.) மற்று அதன் வடிவு கேட்பின் - அவ்விமானத்தின் உருவச் சிறப்பை வினவுமிடத்து, மரகத மணிக்கல் தன் மேல் - மரகதம் என்னும் நீலமணியாலியன்றதொரு மலையின்மேல், பெற்றதன் நிலையிற்றாகி - தன் இருக்கையைப்பெற்ற நிலைமையை யுடையதாகி, பெருகிய வளமை தோன்றி - பாரித்த வளம் உடையதாய், பசும்பொற் சோதி சுற்றிய சொரிந்து - பசும் பொன்னிறமான ஒளியைத் தன்னைச் சூழ வீசி, துறக்கம் காணப்போய் - தன்னையொத்த விமானம் ஈண்டுளதேயோ எனப் பார்க்கும் பொருட்டுச் சுவர்க்க நாட்டினளவு உயர்ந்து போய், முற்றிய முகடு - முடிந்ததன் குவடு, நீலக் குவட்டிடை முடிந்தது - விசும்பின் நீலநிறமான உச்சியிற் சென்று முடிவுற்றது, (எ - று.) அவ்விமானம் ஒரு மரகத மலையிடத்தே தன் அடிப்பகுதி உளதாகச் சோதி சொரிந்துபோய்த் துறக்கங் காணச்சென்று, வானநீல முகட்டிடை முடிவுற்றது, என்க. |
(இது முதல் 9 செய்யுள்கள் விமானத்தின் சிறப்புக்கூறும் ஒரு தொடர்) (இ - ள்.) பாரித்த பவழம் திண்கால் - பருத்த பவழத்தாலியன்ற திண்ணிய கால்களையும், பளிங்குபோழ் பலகைதன் மேல் - பளிங்கு அரிந்து இயற்றிய பலகைகளின்மேல், பூரித்த சுடரின் செம்பொன் போதிகை - நிறைத்த ஒளியுடைய பொன்னாலியன்ற குறுந்தறிகளையும் உடையதாய், |