பக்கம் : 563
 

     (இ - ள்.) அயல எல்லாம் - அவ்வுள்ளிடத்தின் பக்கங்களில் அமைந்தவை எல்லாம்,
பாடகம் இலங்க - பாடகம் என்னும் காலணி திகழ, செங்கேழ் - சிவந்த நிறமுடைய, சீறடி -
சிறிய அடிகளையும், பரவை அல்குல் - பரந்த அல்குற்றடத்தையும் உடைய, நாடக மகளிர்
- கூத்தியன் மடந்தையர், ஆடும் நாடக அரங்கும் - ஆடுதற்கிடமாகிய கூத்தாட்டரங்கும்,
மாடு அகம் தெளிப்ப நன் பொன்வேய்ந்த - பக்கங்களும் உள்ளிடமும் விளக்கமுறும்படி
நல்ல பொன்னால் வேயப்பட்ட, மண்டபத்தலமும் - மண்டபமாகிய இடங்களும், வண்ணம்
ஆடகம் அணிந்த கூடநிலைகளும் - நிறமுடைய பொன்னால் அழகுறுத்திய
அறையிடங்களுமே யாகும், (எ - று.)

     அவ் விமானத்துள் நாடக அரங்கும், மண்டபங்களும், கூடங்களும் உள்ளன என்க.
 

( 30 )

 

857.

மரகத மணிக ளீன்ற கதிரெனுந் தளிர்கள் வார்ந்து
சொரிகதிர் வயிரங் கான்ற சுடரெனுங் கொழுந்து தோன்றிப்
புரிகதிர் முத்த மென்னும் புதுநகை யரும்பு பம்பி
விரிகதிர்ச் செம்பொன் பூத்து விண்ணணங் குறுப்ப வீங்கி.
 

      (இ - ள்.) மரகத மணிகள் ஈன்ற கதிர் எனும் தளிர்கள் வார்ந்து - மரகதம் என்னும்
மணிகள் வீசும்சுடர் ஆகிய இளந்தளிர்கள் நீண்டு, சொரி கதிர் வயிரம் கான்ற சுடர் எனும்
கொழுந்து தோன்றி - மிக்கு ஒளிர்கின்ற வயிரம் என்னும் மணி வீசிய கதிராகிய
கொழுந்துவிட்டு, புரிகதிர்முத்தம் என்னும் புதுநகை அரும்பு பம்பி - புதுமை திகழகின்ற
சுடருடைய முத்தென்னும் மணியாகிய விளங்கும் அரும்புகள் முகிழ்த்து, விரிகதிர்ச்
செம்பொன்பூத்து - விரிந்த ஒளியையுடைய செம்பொன்னாகிய மலர் விரிந்து,
விண்அணங்குறுப்ப வீங்கி-விசும்பை வருத்துவது போலப் பருத்து, (எ - று.)

     அவ்விமானத்தை ஒரு கற்பக மரமாக உருவகிக்கின்றார். மரகத மணிகளின்
கதிர்களாகிய இளந்தளிர்களும், வயிரமணிகளின் சுடராகிய கொழுந்துகளும்,
முத்தொளியாகிய அரும்புகளும், பொன்னொலியாகிய மலரும் உடையதாய், விசும்பில்
விரிந்து. (முடிவு அடுத்த செய்யுளிற் காண்க.)
 

 ( 31 )

சடிமன்னன் சுயம்பிரபையை அழைத்தல்

858.

கதிர்நகைக் கனபொற் சோதிக் கனகசா லங்க ளென்னு
மதுநகப் பருகி மான்ற மணிவண்டு மயங்கி வானோர்
1விதிநகு விமான மென்னுங் கற்பகம் விரிந்த போழ்திற்
பதிநகர்க் கிறைவன் பாவை சயம்பவை வருக வென்றான்.
 


     (பாடம்) 1. விதி தகு.