பக்கம் : 565
 
 
860.

மாகமலை யன்னமணி மாடநிலை யுள்ளாற்
போகமிகு பூந்தவிசின் மீதுபுதை வுற்ற
வாகைவள மாலைபுனை மன்னன்மகள் செல்வாள்
மேகபட லத்திடை மினற்கொடியொ டொத்தாள்.
 

      (இ - ள்.) வாகை வனம் மாலை புனை மன்னன் மகள் - அழகிய வெற்றிமாலையை
அணிந்த சடியரசனுடைய மகளாகிய, போகம் மிகு பூந்தவிசின்மீது புதைவுற்ற மகள் -
இன்பம்மிக்க பூவணையின்மேல் வீற்றிருந்த சுயம்பிரபை, மாகம்மலையன்ன மணி மாடம்
நிலையுள்ளால் - விசும்பை அளாவியுயர்ந்த மலையை ஒத்த அழகிய மேனிலைமாடத்தின்
ஊடே, செல்வாள் - இயங்குகின்றவள், மேக படலத்திடை - முகிற்குழாத்தின் ஊடே
இயங்கும், மினற்கொடியொடு ஒத்தாள் - கொடிமின்னலை ஒப்பத் தோன்றினாள், (எ - று.)

     மன்னன்மகள், மாடமிசைச் செல்வாள், மேகபடலத்திடை மின்னற் கொடியை ஒத்தாள் என்க.
 

( 34 )

 
861.

1அங்கையி னயிற்படைய ராணுடையர் பூணர்
கொங்கைவள ராதகுழ லார்கள்புடை காப்பப்
பங்கய முகத்தவர்ப லாண்டுபல கூறி
நங்கையடி போற்றியென நங்கைநடை கற்றாள்.
 

     (இ - ள்.) அங்கையின் அயில் படையர் - அழகிய கையில் வேற்படையுடையாரும்,
ஆணுடையர் - ஆண்மக்களைப்போன்று உடை உடுத்தியவரும், பூணர் -
அணிகலன்களையுடையாரும், வளராத கொங்கை குழலார்கள் - பருத்துத் திரளாத இளைய
முலையினையும் கற்றையாகிய அளகத்தையும் உடையாரும் ஆகிய பெண்பேடிகள்,
புடைகாப்ப - பக்கத்தே காவல்செய்து வரவும், பங்கயமுகத்தவர் - செந்தாமரைமலரை ஒத்த
அழகிய முகத்தையுடைய பாடன்மகளிர்கள், பலாண்டு பல கூறி - பலபடப் பல்லாண்டு பாடி,
நங்கையடி போற்றி என - நங்கையே நின் அடி போற்றி என்று போற்றிசைப்பவும், நங்கை
நடை கற்றாள் - சுயம்பிரபை நடத்தலைப் பயில்வாளாயினள், (எ - று.)

இறப்ப நடந்தறியாதாள் என்பார், நடைகற்றாள் என்பார். அந்தப் புரத்தே பேடிகள் காவல்
செய்தல் மரபு. அயில் ஏந்தியவரும், ஆணுடை தரித்தவரும், வளராதவரும், குழலாரும்
ஆகிய பேடியர் புடைகாப்ப, மகளிர்கள் பல்லாண்டுகூறி, போற்றி என நங்கை நடை
கற்றாள், என்க.
 

( 35 )


     (பாடம்) 1. அங்கை யிருப்பிற் புடைய.