பக்கம் : 568 | | சுயம்பிரபை விமானம் ஏறுதல் | 866. | அன்னவகை 1தேவியர்க ளோடமரு மெல்லை முன்னுமுக வோரையொடு மூர்த்தநல நோக்கி மன்னுபுல வோர்கள்சொல மன்னன்மக டன்னை இன்னகை விமானதல மேறுகினி தென்றான். | (இ - ள்.) அன்னவகை - அவ்வாறு, தேவியர்களோடு அமரும் எல்லை - சுயம்பிரபை தாயர்களோடு வீற்றிருந்த பொழுது, மன்னுபுல வோர்கள் - சோதிடநூலில் நிலைபெற்ற அறிவுடையோர்கள், முகவோரை யொடு மூர்த்தநலம் நோக்கி - முதன்மையுடைய ஓரை (இராசி) முழுத்தம் இவற்றின் நலன்களை ஆராய்ந்தறிந்து, சொல - சொல்லுதலாலே, மன்னன் - சடி வேந்தன், மகள்தன்னை - தன் மகளாகிய சுயம்பிரபையை, இன்னகை விமான தலம் ஏறுகினிது என்றான் - இன்புறத்திகழும் எழிலுடைய விமானத்தில் இனிதே ஏறுக என்று பணித்தான், (எ - று.) அவ்வாறு ஒப்பனை செய்யப்பட்டுச் சுயம்பிரபை தாயரோடே வைகிய பொழுது புலவர்கள் ஓரை முழுத்த முதலிய நாள்நன்மை நோக்கிச் சொல்ல, சடிமன்னன் மகளை, விமானத்தில் இனிதே ஏறுக என்றான், என்க. | ( 40 ) | | 867. | தொண்டைதொலை வித்ததுவர் வாய்மகளிர் சூழக் 2கண்டுவளர் தாயரொடு 3கஞ்சுகியர் காப்ப விண்டுவளர் சோதிகொள் விமானமது சேர்வாள் வண்டுவளர் கற்பமுறை வான்மகளொ டொத்தாள். | (இ - ள்.) தொண்டை தொலைவித்த துவர்வாய் மகளிர் - கொவ்வைக் கனியைத் தோற்கச்செய்த பவளவாய் மகளிர் பலர், சூழ - தன்னைச் சூழ்ந்து வரவும், கண்டுவளர் தாயரொடு - வளர்த்தற்குரிய செயல்களை நன்குகண்டு தன்னைவளர்த்த செவிலித் தாயாருடனே, கஞ்சுகியர் - மெய்ப்பைபுக்க முதியரும், காப்ப - காவலைச்செய்து போதவும், விண்டுவளர் சோதிகொள் - தோன்றிவளர்தலையுடைய ஒளிமிக்க, விமானமது - விமானத்தை, சேர்வாள் - அடைகின்ற சுயம்பிரபை, வண்டுவளர் கற்பமுறை வான்மகளொடு ஒத்தாள் - வண்டுகள் இசைவளர்க்கும் கற்பலோகத்தின் கண்ணே வதிகின்றதொரு தெய்வப் பெண்ணைப்போன்று திகழ்ந்தாள், (எ - று.) மகளிர் சூழத் தாயரோடே, கஞ்சுகியர் காப்ப, விமானம் ஏறுகின்றவள், வான்மகளை ஒத்தாள், என்க. | ( 41 ) |
| (பாடம்) 1. தேவிமகளோடமரும். 2. கொண்டு. 3. காஞ்சுகியர். | | |
|
|