பக்கம் : 569 | | | 868. | 1முன்னிமுடி வித்தமிகு விஞ்சையின் முதிர்ந்தார் அன்னநடை யாட்கடிமை யார்வமொ டடைந்தார் பின்னிவிடு கூந்தலர் பிடித்தவயில் வாளர் கன்னியரி ராயிரவர் கன்னிபுடை காத்தார். | (இ - ள்.) முன்னி முடிவித்த - மேற்கொண்டு முழுதுறப் பயின்று முற்றிய, மிகு விஞ்சையின் முதிர்ந்தார் - மேலான வித்தையில் மேம்பாடுற் றவரும், அன்னநடையாட்கு - அன்னம் போலும் நடையையுடைய சுயம்பிரபைக்கு, அடிமை - அடிமைத்தொழில் செய்தலில், ஆர்வமொடு அடைந்தார் - மிகுந்த ஆவலுடனே வந்தவர்களும், பின்னிவிடு கூந்தலர் - சடையாகப் பின்னித் தூங்கவிட்ட அளகத்தையுடையவரும், பிடித்த அயில்வாளர் - வேலேந்துநரும் வாள்ஏந்துநரும் ஆகிய, கன்னியர் - கன்னிமைத் தன்மையுடைய, இராயிரவர் - இரண்டாயிர மகளிர்கள், கன்னி புடைகாத்தார் - சுயம்பிரபையை மருங்கில் நின்று காவல் செய்தனர், (எ - று.) அயில் - கூர்மையுமாம். நன்கு வித்தை கற்றவரும், ஆர்வமோ டடைந்தவர்களும், கூந்தலுடையாரும். அயில் வாள் உடையோரும், கன்னியரும் ஆகிய ஈராயிரவர், கன்னியைக் காவல் செய்தனர், என்க. | ( 42 ) | | 869. | அஞ்சுடர் மணிக்குழவி யாடுகழன் மாடம் பஞ்சுடைய பந்துகிளி பாவையொடு பூவை மஞ்சுடைய மின்னினனை யாண்மகிழு நீர 2செஞ்சுடர் விமானமது சேர்ந்தன செறிந்தே. | (இ - ள்.) அஞ்சுடர் மணிக்குழவி - அழகிய ஒளியுடைய மணியாலாய பொம்மைக் குழந்தைகளும், ஆடுகழல் - ஆடுகின்ற கழங்குகளும், மாடம் - விளையாட்டு வீடுகளும், பஞ்சுடைய பந்து - பஞ்சாலய பந்துகளும், கிளி - கிள்ளைகளும், பாவை - மரப்பாவைகளும், பூவை - நாகணவாய்ப்புட்களும் ஆகிய இன்னோரன்ன, மஞ்சுடைய மின்னின் அனையாள் - முகிற் கண் உள்ள மின்னை ஒத்த சுயம்பிரபை, மகிழும்நீர - மகிழ்தற்குக் காரணமான பிற விளையாட்டுப் பொருள்களும், செஞ்சுடர் விமானமது சேர்ந்தன செறிந்தே - செவ்விய ஒளியாற்றிகழும் விமானத்தின்கண் சேர்க்கப்பட்டு நிறைந்தன, (எ - று.) மணிப்பொம்மை முதலிய விளையாட்டுக் கருவிகள் விமானத்தே சேர்க்கப்பட்டன என்க. | ( 43 ) |
| (பாடம்) 1. முன்னுமுடி. 2. செஞ்சுடை. | | |
|
|