(இ - ள்.) முரசம் ஆர்த்தன - முரசுகள் ஆரவாரித்தன, முரிவளை - அரிந்துமுரித்த சங்குகள், முரன்றன - ஒலித்தன, முகிலிடை வயிர்ஏங்க - மேகங்களின் இடையே கொம்புகள் முழங்காநிற்ப, அரியொடு ஆகுளி - மருதப்பறையுடனே சிறுபறை, ஆலித்த - முழங்கின, அணிமுழவு அதிர்ந்தன - அழகிய மத்தளங்கள் முழங்கின, அருகெல்லாம் - பக்கங்களில் எங்கும், விரை செல் மாவொடு - விரைந்து செல்லும் இயல்பினவாகிய குதிரை களுடனே, களிறுகள் விரவின - யானைகள் கலந்தன, கடுமான்தேர் - கடுகிச்செல்லும் குதிரைகளையுடைய தேர்கள், மிடைந்தன - நெருங்கின, அரசனும் - இவற்றிடையே சடிமன்னனும், புரசை யானையின் எருத்திடை - கழுத்திடுகயிற்றையுடைய யானையினது பிடரின்கண் வீற்றிருந்து, புகழொடு பொலிவுற்றான் - சான்றோர்தம் புகழுரையோடு திகழ்ந்து தோன்றினான், (எ - று,) ஆகுளி - சிறுபறை. அவ்வழி, முரசம் முதலியன முழங்கின. மாவும் களிறும் நெருங்கின, சடியரசன் யானையின் எருத்திடைப் புகழோடு விளங்கினன், என்க. |