மலைச் சந்தனத்திரள்களை - செழிப்புடைய மலையினின்றும் தான் வாரிக் கொடுவந்த சந்தனக்குறடுகளை, கரைமேல் வைத்து அரைக்கும் - கரையாகிய கல்லின் மேலேயிட்டு அரைக்கின்ற, மற்று இது - இக்கங்கையாற்றின் வெள்ளம், குணகடற்றிரையொடும் - கீழைக்கடலின் அலைகளோடு, பொருது அலது அவியாதே - போர்செய்து அடங்குவதன்றி இடையே அமையாது என்பதாம், (எ - று.) அஞ்சிறைப் பறவைகள்போலக் சுட்டம் கூட்டமாய்ப் பெயர்ந்து செல்லும் இனவண்டு எனினும் ஆம். இலையம் - லயம் - அலைகள் ஒன்றுபோல அனைத்தும் கரையை மோதி மோதி மீள்தலின் இலயம்பட, என்பார் இலையத்தால் என்றார். இலையம் - கூத்து, கூத்திடுமாறுபோல எனினும் பொருந்தும். |
(இ - ள்.) முந்து நிகழ் யாறு - பாவாய்! இதோ நம் முன்னர்த் தோன்றி ஓடும்யாறு, மற்றிதன் முதன்மலைப் பிறந்து - இவ்விமயமலையின் முன்னர் உள்ள அப் பொன்மலையிலேயே தோன்றி, நம் மலையது முழைப்பேரும் - நமது மலையின் பிலத்தினூடே வந்திழிகின்றதும், செழுங்கலம் சிதர்கின்ற வலத்தது - பெரிய மரக்கலங்களைச் சிதைத்தொழிக்கும் விரைவினையுடைய நீர் ஒழுக்குடையதும் ஆகிய, சிந்து என்பது - சிந்து என்று சிறப்பாகச் சொல்லப்படும் யாறு ஆகும், அது பருகுங்கால் - அதன் எழிலைக் கூறுமிடத்தே, நுந்து பொன் ஒளித் திரையெனும் - மிகுகின்ற பொன்னிறமுடைய அலைகள் என்னும், கரதலப்புடங்களின் - தன்கைகளின் நுனியில், நுரை என்னும் பந்து - நுரை யென்னும் வெண்பூப்பந்து, பொங்க நின்று அடித்திட - உயர்ந்தெழுமாறு நின்று புடைத்து, திளைப்பது ஒத்துளது - ஆட்டயர்தலை ஒத்துத் தோன்றுகின்றது, (எ - று.) |