பாவாய் நம் முன்னர்த தோன்றும் யாறு, சிந்து என்னும் சிறந்ததொரு யாறாம்; அஃது அலைகளாகிய தன் கைகளாலே, நுரைகளாகிய பூம்பந்துகளைப் புடைத்து, ஆட்டயர்தல் போன்று தோன்றுதலைக் காண் என்றாள் என்க. |
(இ - ள்.) உயரும் சந்தனப் பொழில் அலைத்து - உயர்ந்தோங்கிய சந்தனச் சோலைகளை முறித்து, ஒளிர்மணிக் கலங்களை உமிழ்ந்திட்டு - சுடருகின்ற மணிகளாகிய அணிகலன்களை எறிந்து, பெயரும் தெண்டிரைப் பிறங்கலுட் பிணங்கிய பெருவரை அகில்தேக்கி - இயங்கும் தனது தெளிந்த அலைப் பெருக்கத்துள் தன்னொடு மாறுபட்ட பெரிய மலையிடத்தனவாகிய அகில் முதலியவற்றைக் கவர்ந்து நிறைத்துக்கொண்டு, வைர வேதிகை மலைவது - சுரமை நாட்டிலுள்ள வயிரத்தாலியன்ற தெற்றிகளை மோதுவதாய், கோபுர வாய்தலின் படிதீண்டி - போதன நகரத்து அரண்மனையின் கோபுர வாயிற்படியைத் தொட்டு, அயிரை வார் கரைக் குடகடல் திரையொடு - நுண்ணிய கருமணல் பரந்த நெடிய கரையையுடைய மேற்றிசைக் கடலின் அலைகளோடே, பொருதல தவியாதே - போர் செய்தவிதலன்றி இடையே அமைவில்லாதது, (எ - று) இவ்வியாறு, சந்தனப் பொழிலலைத்து, மணிக்கலமுமிழ்ந்து, வரையகில் தேக்கி, வேதிகை மலைந்து, கோபுர வாயிற்படி தீண்டி குடகடலில் விழும் என்றாள,் என்க. |