(இ - ள்.) அலங்கல் வார்குழல் அமிர்தன்ன சின்மொழி அரிவை - மலர்மாலையணிந்த நீண்ட அளகத்தையுடைய அமிழ்தம்போலும் சிலவாகிய இனிய மொழிகளை மிழற்றும் சுயம்பிரபாய்! நம் மருங்கு எல்லாம் - நம் பக்கத்தில் எங்கும், விலங்கல் போல்வன - மலைகளை ஒத்தனவும், வெண் மருப்பு இரட்டைய - வெண்மை நிறமான இரு கோடுகளையுடையனவும் ஆகிய, வேழங்கள் - யானைகள், விளையாடி - தம்முள் விளையாடுதலைச் செய்து, இலங்குமால்வரை - விளங்குகின்ற பெரிய மலைகளையும இறுவரைத் தடம் - அம்மலைகளின் பக்க மலைகளையும், குத்தி யிடந்திட - தம் கோட்டாற் குத்திப் பெயர்க்க, இருபாலும் - அங்ஙனம் குத்திப் பெயர்க்கப்பட்ட இருமருங்குகளினும், கலங்கொள் பேழைகள் கவிழ்ந்தென - அணிகலப்பேழைகளைக் கவிழ்த்தாற்போல, கதிர்மணி சொரிகின்ற அவை - சுடருடைய மணிகளைச் சொரிவதாய அக்காட்சிகளையும், காணாய் - காணுதி, (எ - று.) அரிவையே! நம்மருங்கு வேழங்கள் விளையாடி, மலையிடைக் குத்திப் பெயர்த்தனவாக, அம்மலைகள், அணிகலப் பேழையைக் கவிழ்த்தாற் போன்று மணிகளைச் சொரிவன காண் என்றாள், என்க. |