பக்கம் : 58
 
     தம்மிடத்துள்ள வேட்கை மிகுதியால் அரசன் அரசியல் அலுவல்களை அமைச்சரிடம்
ஒப்புவித்துத், தம்முடனே எப்பொழுதும் இன்புற்றிருக்கும்படி அம்மங்கையர் மன்னனைத்
தம் வழிப்படுத்தி வைத்தனர். மனத்திடைப் பிணித்துவைத்தார் - அரசன் தமது
மனக்கருத்தின்படி நடக்குமாறு வழிப்படுத்தி வைத்தார்கள். காமவல்லி...கற்பக தருவிற்
படருங்கொடி.

     ஒரு தேவிக்குக் கற்பகத்தின் கொழுந்தையும் மற்றொருத்திக்குக் காமவல்லியையும்
உவமையாகக் கூறியபடியால் பயாபதிக்குக் கற்பகமரம் உவமையாதல் உய்த்துணர்க.

 ( 32 )

மாலாகி நிற்கும் மன்னன்

68. 1மங்கைய ரிருவ ராகி மன்னவ னொருவ னாகி
அங்கவ 2ரமர்ந்த தெல்லா மமர்ந்தருள் பெருகி 3நின்றான்
செங்கயல் மதர்த்த வாட்கட் டெய்வமா மகளிர் தோறும்
தங்கிய வுருவந் தாங்குஞ் சக்கரன் 4றகைமை யானான்.
 

     (இ - ள்.) மங்கையர் இருவர் ஆகி - மனைவியர் இரண்டு பேராகி; மன்னவன்
ஒருவன் ஆகி - அவர்கட்குரிய தலைவன்தான் ஒருவனேயாகி; அங்கு அவர் அமர்ந்தது
எல்லாம் அமர்ந்து - அத்தன்மையை உடைய அவர்கள் விரும்பிய எல்லாவற்றையும்
தானும் விரும்பி; அருள்பெருகி நின்றான்-அவர்களிடத்திலே சிறந்த அன்பு பெருகி
நின்றவனான் பயாபதி மன்னன்; செம்கயல் - சிவந்த கயல்மீன் போன்றன ஆகிய;
வாள்கண் - ஒளிபொருந்திய கண்களையுடைய; தெய்வம்மா மகளிர்
தோறும் - தெய்வத்தன்மை யுள்ளவர்களாகிய பூமகள் நிலமகள் என்னும் இருவரிடத்தும்;
தங்கிய - ஒரே தன்மையாகப் பொருந்துகின்ற; உருவம் தாங்கும் - வடிவத்தைக்
கொள்ளுகின்ற; சக்கரன் தகைமை ஆனான் - உருளைப்படையையுடைய திருமாலின்
தன்மையுடையவன் ஆனான். (எ-று.)

     தெய்வமா மகளிர் அறுபதாயிரம் கோபிகைகளுமாம். இச்செய்யுளால் பயாபதி
மன்னனுக்கும் திருமாலுக்கும் ஒப்புக் கூறினார். இஃது உவமையணி. திருமால் - பயாபதி.
சீதேவி பூதேவி இருவரும் மனைவியர் இருவருக்கும் ஒப்பு. அமர்ந்ததெல்லாம்,
ஒருமைப்பன்மை மயக்கம்.

( 33 )

     (பாடம்) 1. மங்கையார், 2. அமைந்தது, 3. நின்றார், 4. தகையானான்.