பக்கம் : 580
 

     (இ - ள்.) பைங்கண் செம்முகம் பரூஉக்கை அம்பகடு பசிய கண்களையும் சிவந்த
முகத்தையும், பருத்த துதிக்கையையுமுடைய அழகிய களிற்றியானைகள், அங்கண் மால்வரை
அருவிதம் தடக்கையில் புடைத்து தம்பால் பிடிக்கணம் சூழ - தம் பக்கத்தே தம் பிடி
யானைகள் சூழ்ந்து நிற்ப, நின்று - அழகிய இடமுடைய பெரிய மலையினின்றும் பொழியும்
அருவியாகிய நீர்வீழ்ச்சியைத் தம்முடைய வலிய துதிக்கையாலே சிதறி, அமர்ந்து ஆடி -
விரும்பி விளையாடி, செங்கற்றூளி - அம்மலையிடத்தாகிய காவிக் கற்களின் துகளை வாரி,
தம் செவிப்புறத்து எறிதலில் - தம்முடைய செவிகளிலே வீசுதலாலே, பொங்கி
சிகரங்களிடையெல்லாம் - அத்துகள் மிக்குப்படிந்து மலைச் சிகரங்களின்மேல்,
குங்குமப்பொடி யொத்து - குங்குமப் பொடி படிந்ததைப் போன்று, பொலிகின்ற -
திகழ்கின்றன வாதலை, பொலங்கொடி - பொற்பூங்கொடியை ஒப்பாய், புடை நோக்காய் -
பக்கத்தே காண்க! (எ - று,)

     களிற்று யானைகள் அருவிநீரைத் தடுத்து விளையாடிப் பின்னர்ச் செங் கற்றூளியைத்
தம் செவியிடத்தே வீசிக்கோடலாலே, அவை குங்குமப்பொடி யப்பிய சிகரங்களைப்போற்
றோன்றுதல் காண் என்றாள், என்க.
 

( 58 )

 
885.

துளங்கு வார்குழைத் துவரிதழ்த் துடியிடைச்
     சுடர்நுதற் சுரிகோதாய்
விளங்கு வெங்கதிர் விளங்கிய 1விசும்பிடை
     யியங்குதல் புலன்கொள்ளார்
பளிங்கி னொள்ளறைப் பரப்பிடைப் பாய்வித்த
     பருமணி நெடுமான்றேர்
வலங்கொ ணம்படைக் கடலிடை மறித்தவை
     சுழல்கின்ற 2வகைநோக்காய்.
 

      (இ - ள்.) துளங்கு வார்குழை துவர் இதழ் துடிஇடை சுடர் நுதல் சுரி கோதாய்! -
அசைதலையுடைய நீண்ட குழையையும் பவளம் போன்ற உதடுகளையும் உடுக்கையை ஒத்த
இடையினையும் ஒளிமிக்க நெற்றி யினையும் சுருண்ட அளகத்தையுமுடைய மாலையணிந்
சுயம்பிரபாய்!, வலம் கொள் நம் படைக் கடலிடை - வளமிக்க நமது கடல்போன்ற பெரும்
படையில் வைத்துத் தேர்வலவர், விளங்கு வெங்கதிர் விலங்கிய விசும்பிடை இயங்குதல்
புலன் கொள்ளார் - ஒளியாற்றிதழ் தலையுடைய ஞாயிற்று மண்டிலம் ஒதுங்குமாறு யாம்
விசும்பினிடத்தே இயங்குகின்றோம் என்பதை உணராதவராய், பளிங்கின் ஒள்ளறைப்
பரப்பிடைப் பாய்வித்த - விண்ணுற வளர்ந்த பளிக்குச் சிகரங்களின் ஒள்ளிய குகைகளிலே
புகப்பாய்வித்த, பருமணி நெடுமான் தேர் - பரிய மணிகளிழைக்கப்பட்ட நெடிய புரவிகளை
யுடைய தேர்கள், மறித்தவை - உண்மையுணர்ந்து மீளத் திரித்துச் செலுத்தப் படுகின்றவை,
சுழல்கின்ற வகை - தம் செலவு தடைப்பட்டுச்சுற்றுகின்ற தன்மையை, நோக்காய்
நோக்குவாயாக! (எ - று.)

 


     (பாடம்) 1. விசும்புடை யிலங்குதன் 2. வவை நோக்காய்.