பக்கம் : 581
 

     கோதாய்! வானத்தி லியங்குதலைக் குறிக் கொள்ளாத சில தேர்வலவர், பளிங்குச்
சிகரங்கள் தம்முன்னர் உள்ளமை அறிகிலாது, அவற்றிடைத் தம் தேரைச் செலுத்தி,
வழியன்மையால், மீளவும் அத்தேர்களைத் திருப்பிச் சுழலும் வகை ஓட்டுதலைக் காண்
என்றாள் என்க.
 

( 59 )

 
886.

எடுத்த மாருத மெறிதலி னெகிழ்ந்தன
     சிகழிகை யிணரோடுந்
தொடுத்த 1மாலைகள் துணர்கொளப் புனைவன
     துகிலிடை புடைசோர
2உடுத்த காஞ்சியி னொளிமணிக் 3கதிர் நகைப்
     பட்டங்களுடையாக
அடுத்து வீழுமொ ரணியிழை யிளையவள்
     படுகின்ற ததுகாணாய்
 

      (இ - ள்.) எடுத்த மாருதம் எறிதலின் நெகிழ்ந்தன - விரைதலை மேற்கொண்ட
காற்று மோதியடித்தலாலே கட்டவிழ்ந்து தளர்ந்தனவாகிய, இணரோடும் தொடுத்த சிகழிகை
- கொத்துக் கொத்தாய் வைத்துக்கட்டிய கொண்டைப்பூச்செண்டும், துணர்கொளப் புனைவன
மாலைகள் - கொத்துக் களை வரிசையில் வைத்துப் புனைந்த மலர்மாலைகளும், இடைதுகில்
- இடையில் உடுத்த மென்றுகில்களும், புடைசோர - இடங்களினின்றும் நழுவி வீழ்ந்துவிட,
உடுத்த காஞ்சியின் ஒளிமணிக் கதிர்நகைப் பட்டங்கள் உடையாக - திண்ணிதின்
உடுத்தப்பட்ட கோவைமணி அணியாகிய காஞ்சி முதலிய அணிகலன்களே
ஆடையாகக்கொண்டு, அடுத்து - மகளிர் கூட்டத்தை அடுத்து, வீழும் - நாணத்தால்
அம்மகளிருள் வீழ்கின்ற, ஓர் அணியிழை - அழகிய அணிகலனுடையாள் ஒருத்தி,
படுகின்றது அது காணாய் -படுகின்ற அலமரலாகிய அதனுள் காண்க! (எ - று)

     காஞ்சி - ஆடைக்குள் அணியும் ஓரணிகலம். பெருங்காற்று வீசுதலாலே ஒருத்தி
அணிந்திருந்த மலர்மாலைகளும் துகிலும் நழுவி விழுந்துவிட்டனவாக, காஞ்சி என்னும்
மணியணிகலனே ஆடையாக, தன் மருங்கு நிற்கும் மகளிர் குழாத்துள்ளே நாணி
வீழ்வாளின், அலமரலைக் காண் என்றாள், என்க.
 

( 60 )


     (பாடம்) 1. மாலையள் 2. வகுத்த 3. நகைப் படங்கள் உடையாக.