(இ - ள்.) மல்கு மும்மதம் மழகளிறு உழக்கலின் - பெருகுகின்ற மூன்று மதங்களையும் உடைய இளமைமிக்க களிற்றியானைகள் புகுந்து துகைத்தலாலே, மயங்கிய மழை மேகம் - மயக்கமடைந்த மழை நீரையுடைய முகில்கள், பில்கும் நுண்டுளி உறைத்தலில் - உதிர்க்கின்ற நுண்ணிய நீர்த் துளிகள் வீழ்தலாலே, பனித்த நம் பெரும்படை மடவார்கள் - நடுக்கத்தையுற்ற நமது பெரிய படைக்கண் உள்ள சில மகளிர்கள், நல்கு காதலர் அகலத்துள் ஒடுங்குதல் - அந்நடுக்கம் தீருமாறு அருள்வழங்கும் தம் காதலர் அயலினராகவும் அவர்தம் மார்பகத்தே அணைந்து ஒடுங்குதலை, பலர் முன்னை நனி நாணி - அயலார் பலர் பார்த்தலை மிக மிக நாணியவராய், மெல்கு பூந்துகில் விரித்தவா வருகின்ற - மென்மையால் அந் நீர்த்துளி வீழ்ச்சிக்கு அரணாகாத அழகிய ஆடையையே (அரணாவது போல) விரித்துத் தடுத்தவாறே, வருகின்ற விதலைகள் - வருவதாகிய இன்னல்களையும் மிக நோக்காய் - நன்கு காண்க!. (எ - று.) நங் களிற்றுக் குழாங்களா லுழக்குண்ட முகில்கள், நீர்த்துளியை வீசுதலாலே, குளிரால் நடுங்கிய மகளிர்கள், அக்குளிர்தீர அரணாகும் காதலர் அயலில் உளராகவும், அயலார் காணுதலை நாணி, அவர் அகலத்தே அணைந்தொடுங்காமல், குளிர்க்கு அரணாகாத மென்றுகிலை விரித்தவாறே நடுங்குவாரைக் காண் என்றாள், என்க. |