பக்கம் : 588
 

      விட்டது - தங்கியது. சடிமன்னன் படை அவன் அரண்மனையைச் சூழ்ந்து தங்கிற்று;
ஏனைமன்னர் அப்பொழிலின்புறத்தே தத்தமக்கு விருப்பமுள்ள இடங்களிலே தங்கினர்
என்க.
 

( 72 )

 
899.

கன்னி மூதெயில் சூழ்கடி காவினுட்
கன்னி தாதைகண் ணார்நக ரிஞ்சியுட்
கன்னி மார்பலர் காக்குங் கடையதோர்
கன்னி மாநகர் கன்னிக் கியற்றினார்.
 

      (இ - ள்.) கன்னி மூதெயில் சூழ் கடி காவினுள் - அழிவில்லாத பழைதாகிய
மதிலாற் சூழப்பட்ட மணமிக்க - அப்பூம்பொழிலின்கண், கன்னி தாதை கண் ஆர்நகர்
இஞ்சியுள் - சுயம்பிரபையின் தந்தையாகிய சடிமன்னனுடைய இடமகன்ற அரண்மனை
மதிலின் அகத்தே, கன்னிமார் பலர் காக்கும் கடையது - கன்னியராகிய காவல் மகளிர்
பலரால் பாதுகாத்தலையுடைய தலைவாயிலையுடைத்தாகிய, ஓர் கன்னிமாநகர் - ஒரு
கன்னிமாடம், கன்னிக்கு இயற்றினார் - சுயம்பிரபைக்கு இயற்றினார்கள், (எ - று.)

கன்னிமூதெயில் என்றார் ஒருவராலும் ஒருகாலத்தும் தாக்கப்படாத பழைய
திண்மதிலென்றற்கு. அம் மதிலினூடே, கன்னிக்குக் கன்னிமாடம் கண்டனர், என்க.
 

( 73 )

சுயம்பிரபை கன்னி மாடத்தை யடைதல்

900.

மின்னி னார்ந்த விமானத் தலத்திடைப்
பொன்ன னார்பலர் போற்ற விழிந்துதன்
மன்ன னாரரு ளான்மணி மாளிகைக்
கன்னி மாநக ரெய்தினள் கன்னியே.
 

     (இ - ள்.) தன் மன்னன் ஆர் அருளான் - தன் தந்தையாகிய சடிமன்னனது
பெறற்கரிய அருள்பெற்று, பொன் அனார் பலர்போற்ற - திருமகளை ஒத்த மகளிர் பலர் போற்றெடுப்ப, மின்னின் ஆர்ந்த விமான தலத்திடை இழிந்து - மின்னல்போன்ற
ஒளியுடைய விமானத்தை விட்டிறங்கி, தன்மணி மாளிகைக் கன்னிமாநகர் -
தனக்கென்றியற்றிய மணிகள் இழைத்த மாளிகையாகிய அக்கன்னிமாடத்தை, கன்னி
எய்தினள் - சுயம்பிரபை அடைந்தாள், (எ - று.)

     சடிமன்னனின் அருளோடே சுயம்பிரபை விமானத்திழிந்து அக் கன்னிமாடத்தை
எய்தினள் என்க.
 

( 74 )
சடிமன்னன் முதலியோர் வருகையை
மரீசி பயாபதிக்குணர்த்தல்
901.

மற்றவ ரிருத்தலு மருசி சென்றுபின்
சுற்றுநீர் வளவயற் சுரமை நாடுடைக்
கொற்றவன் கழலடி தொழுது கூறலும்
வெற்றிவே லவனொளி துளும்ப வீங்கினான்.