(இ - ள்.) கொற்றவன் - பயாபதி மன்னன்; நீர்முற்றும் வளாகம் எல்லாம் - கடல்நீரால் சூழப்பெற்ற இடங்களை எல்லாம்; முழுதுடன் நிழற்றும் - சிறிதும் எஞ்சவிடாமல் நிழலைச் செய்கிற; மூரி - பெருமை பொருந்திய; ஒற்றைவெண் குடையின் நீழல் - ஒப்பற்ற வெண்கொற்றக் குடையின் நிழலிலே; உலகு கண்படுப்ப ஓம்பி - உலகத்துயிர்களானவைகண் வளரும்படியாகப் பாதுகாத்து; நெடும்கணார் தம் - நீண்ட கண்களையுடைய வர்களின்; குவிமுலைத் தடத்துமூழ்கி - திரண்ட கொங்கைகளிடத்திலே படிந்து நிற்குமாறு; அவற்கு - அம்மன்னனுக்கு; அரசச்செல்வம்- அரசாட்சிப் பொருளானது; இன்னணம் அமர்ந்தது - இவ்வாறு பொருந்துவதாயிற்று. அன்று ஏ : அசை. (எ - று.) பயாபதி மன்னனுக்கு அரசியற் பேறும் இன்பப்பேறும் அமைந்த தன்மை இதுவாகும் என்று கூறிச் சருக்கத்தை முடிக்கிறார். பயாபதி மன்னனுக்கு அரசாட்சிச் சிறப்பிலும் இன்பப்பெருக்கிலும் எத்தகைய குறைபாடும் இல்லையென்பது கருத்து. |