(இ - ள்.) இரவலர் இருநெதி கவர்க - ஏற்போர் பெருஞ்செல்வம்மிக்க நம் கருவூலத்தே புக்குத் தாம் வேண்டியவற்றை அள்ளிக்கொள்க, ஈண்டு இயல் புரவலர் வருகென தூதுவர் போக! - நம் போதனமா நகரத்திற்கு அரசியல் மிக்க வேந்தர் வருக என்றழைத்தற் பொருட்டு நம் தூதுவர்கள் அவ்வரசர்பால் செல்க, திரு அலர் சினகரன் செல்வப் பொன் நகர் - எல்லா நன்மைகளும் விரிதற்குக் காரணமான அருகக்கடவுளுடைய திருக்கோயிலின்கண், விரவு அலர் மழையொடு விழவு செய்கவே -பொன்னும் மணியும் விரவிய மலர் மழை பொழியுமாறு திருவிழாக்கள் எடுத்திடுக, (எ - று.) இயற் புரவலர் என்றான், செங்கோன்மை பிறழாதவரும் மாண்புடைய மன்னர் குடிப்பிறந்தவருமாகிய அரசர் என்றற்கு. நற்செயலைச் செய்யத் தொடங்குமுன் தெய்வங்கட்கு விழாச் செய்து தொடங்குதல் தமிழர் மரபென்க. |
(இ - ள்.) எரிமணி சுடர்அணி இலங்கு நங்கைதன் - ஒளி விடுகின்ற மணிகளாலாகிய விளக்கமுற்ற அணிகலன்களை அணிந்து திகழ்கின்ற சுயம்பிரபை நல்லாள் வதிந்துள்ள, திருமணிக்காவினுள் - திருநிலையம் என்னும் அழகிய பூம் பொழிலினிடத்தே, செல்லும் செய்கையால் - அந்நங்கையை வரவேற்கச் செல்லுமொரு செய்கையுண்மையால் அதற்கேற்ப, புரிமணி பொலங் குழை பொம்மல் வெம்முலை குரு மணிக் கொம்பு அனார் - சுடர்தலுடைய பொற்றோடணிந்த பருத்த விரும்புதற்குக் காரணமான முலைகளையுடைய பூங்கொம்புபோலும் மகளிர்கள், கோலம் செய்க - தம்மை நன்கு ஒப்பனை செய்துகொள்வாராக, ஏ: அசை. (எ - று.) சிறப்பாகச் சுயம்பிரபை நல்லாளை எதிர்கொண்டழைக்கும் பொருட்டுத் தகுதியுடைய நம் மகளிர்கள் நன்கு கோலங்கொள்க என்றான், என்க |