(இ - ள்.) உழைக் கல மகளிரொடு உவந்து செல்வன - அம்மகளிரோடு உடன் செல்லற்குரிய பணிமகளிரும் ஒப்பனை செய்து கொள்ளுதலோடே, அவர்கள் மகிழ்ந்து ஊர்ந்து செல்லுதற்குரியவாய, புழைக்கைய இளம்பிடி புகுந்து பண்ணுக! - தொளைபொருந்திய துதிக்கையையுடைய இளைய பெண்யானைகளையும் அவ்வியானைக் கொட்டிலிற்புக்கு ஒப்பனை செய்க!, தழற்புகை தம் அழற் படையொடு நவின்ற கை - நெருப்பும் புகையும் காலும் சினமிக்க தம் போர்ப்படைகள் பொருந்திய கையினராய், தானைவீரர் - நமது படைமறவர், புகுந்து காவல் அமைக - அம்மகளிர் மருங்கு சென்று காவல் செய்தலில் முனைக. ஏ: அசை, (எ - று.) அம்மகளிரோடே செல்லும் உழைக்கல மகளிரும், அவர் ஊர்ந்து செல்லும் பிடிகளும், ஒப்பனை கொள்க; அம்மகளிரை, மறவர் புறம் நின்று போற்றுக; என்றான் என்க. (79) பயாபதி மரீசிக்கு முகமன் கூறல் |
(இ - ள்.) இன்னன உழையவர்க்கு அருளி - இவ்வகையாக ஏவன்மாந்தர்க்குக் கூறியபின்னர், ஏந்துதோள் மன்னவன் - ஆற்றல் தாங்கிய தோள்படைத்த அப்பயாபதி வேந்தன், மருசியை மருள கட்டுரைத்து - மருசி என்னும் தூதன் தனது உயரிய முகமன் உரைகளால் மனமருண்டு வியப்புறுமாறு இனியன மிகப்பேசி, என்னொடும் பெயர்தி நும் பாடிக்கு என்று - ஐய! நீ யான் சடியரசனைக் காண நும் பாடிக்குப்போகும் துணையும் ஈண்டிருந்து என்னுடனே வருக என்று கூறி அவனோடும், ஒரு பொன்நகர் மாளிகை புகுதல் மேயினான் - ஓர் அழகிய கோயிலின் கண் உள்ள ஒரு மாளிகையுள் சென்று புகுந்தான், (எ - று.) |