(இ - ள்.) அவன் திறத்து வேண்டுப அருளி - பின்னும் அம் மரீசியெனும் அத்தூதன் பொருட்டுச் செய்யற்பாலனவாகிய பரிசில் முதலியவற்றையும் பெரிதும் வழங்கிய பின்னர், வேந்தர்கோன் - அம்மன்னர் மன்னன், ஈண்டிய மந்திரக்கிழவர்க்கு - ஆண்டுக் கூடிய அமைச்சர்களை நோக்கி, யாம் காண்டகு திறலவன் காணும் ஆறு என்னை என - யாம் சென்று காணுதற்கியன்ற தகுதியுடைய ஆற்றல் மிக்க அச்சுவலனசடி மன்னனைக் காணுதற்குரிய வழி யாது கூறுங்கோள் என வினவ, ஆண்டகைக்கு - அவ்வணம் வினவிய ஆண்மை மிக்க பயாபதிக்கு, அவர்களும் - அவ்வமைச்சர்களும், அறியச் செப்பினார் - விளக்கமாக இயம்பினார், (எ - று.) மரீசிக்குச் செய்யும் சிறப்பெல்லாம் செய்தபின்னர், தன் அமைச்சரை நோக்கித் திறலவற் காணும் ஆறு என்னை என, அவர்களும் செப்பினர், என்க. |
(இ - ள்.) விண் இயல் விஞ்சையர்க்கு இறைவன் - விசும்பில் இயங்கும் இயல்புடைய விச்சாதரர்களுக்கு மன்னனாகிய சடிவேந்தன், வேந்தரால் - ஏனைய மன்னர்களால், கண்ணிய பெருங்குலக் கடலுள் தோன்றினான் - மதிக்கப்பட்ட ஏசாச்சிறப்பின் இசை விளங்கு பெருங்குலம் என்னும் பாற்கடலுள் பிறந்தவன் ஆவன், நண்ணிய தொடர்ச்சியும் நமிக்கண் நண்ணும் - மேலும் அவன் குலத்திற்கும் உன்குலத்திற்கும் பண்டே |