பக்கம் : 594
 

      (இ - ள்.) ஆதலால் - அவ்வாறாதலால், அவன் திறத்து யாது செய்யினும் -
அம்மன்னனுக்கு யாம் எத்தகைய உயரிய சிறப்பைச் செய்தாலும், ஏதம் ஆங்கில்லை -
அவ்வழிக் குற்றம் ஏதும் உண்டாதலில்லை, கோல் இறைவ - செங்கோல் மன்னனே !,
என்றனர் - என்று கூறினர் (அவர் எத்தகையர் எனில்), கோதிலாக்குணம் புரிகுன்று
அனாற்கு குற்றமற்ற நற்குணங்களான் இயன்றதொரு மலையையே ஒத்த பயாபதி மன்னற்கு,
ஒரு நீதிநூற் கடலின் நின்றனைய நீர்மையார் - ஒப்பற்றதோர் அரசநீதியென்னும் கடல்
நிலைத்து நின்றிருந்ததை ஒக்கும் தன்மையுடைய அமைச்சர்கள் என்றபடி, (எ - று.)

குணக் குன்றத்தை அறவாழி சூழ்ந்தது என்னும் நயம் உணர்ந்து மகிழ்க. இவ்வாற்றால்
சடிமன்னன் எத்தகைய சிறப்பையும் பெறுதற்குத் தகுதியுடையோனே என்றனர் என்க.
 

( 84 )

 
911.

ஆங்கவர் 1மொழியைக் கேட்டே யறிவினுக் கரச ரென்று
வாங்கிருங் கடலந் தானை மன்னவன் மகிழ்ந்து 2மற்றைப்
பூங்குழை மகளிர் காக்கும் பொன்னணி வாயில் போகித்
தேங்கம ழலங்கன் மார்பன் றிருநகர் முற்றஞ் சேர்ந்தான்.

 

     (இ - ள்.) ஆங்கு அவர் மொழியைக் கேட்டே - அவ்விடத்தே அவ்வமைச்சர்தம்
அறிவியல் மொழியைச் செவியுற்ற, வாங்கு இருங் கடல் அந்தானை மன்னவன் - வளைந்த
பெரிய கடல்போன்ற அழகிய படைகட்கு அரசனாகிய பயாபதி, அறிவினுக்கு அரசர் என்று
மகிழ்ந்து - (யாம் வறிய மண்ணிற்கு மட்டும் அரசாக) நீவிரோ அறிவுலகிற்கே அரசர்
ஆவீர்கள் என முகமன் கூறி (அவர் மகிழ) மகிழ்ச்சியை அடைந்து, மற்றைப் பூங்குழை
மகளிர் காக்கும் பொன் அணிவாயில் போகி - அழகிய தோடுடைய மகளிர்களால் காவல்
செய்யப்பட்ட அப்பொன்னால் அழகுறுத்தப்பட்ட வாயிலைக் கடந்து, தேம் கமழ் அலங்கல்
மார்பன் - தேன் கமழ்மாலை அணிந்த மார்பையுடைய அம்மன்னன், திருநகர் -
அரண்மனையின், முற்றம் - தலைவாயிலை, சேர்ந்தான் - எய்தினான்; (எ - று,)

அறிவினுக்கு அரசர் என்றான், யான் உலகிற்கு மட்டுமே மன்னன் நீவிர் அறிவிற் கரசர்
ஆதலார் நீயிரே என்னினும் பெரியீர் என்றவாறு.
 

( 85 )

 

912.

அடுகடா மாவி நாறு மழிமதங் கருவி வீழத்
தொடுகடா வயிரத் தோட்டி யுடையன 3தொடர்க ளூன்ற
விடுகொடா வியாள நிற்ப மெல்லவன் பணிகள செய்யும்
படுகடாக் களிறுந் தேரும் புரவியும் பண்ணு கென்றான்.

    


     (பாடம்) 1. மொழியக் 2. மற்றப். 3. தொடர்கணூன்ற