(இ - ள்.) அடுகடாம் - (நம் யானைகளுள் வைத்து) கொல்லும் இயல்புடைய களிறுகளும், ஆவிநாறும் - மணங்கமழா நின்ற, அழிமதம் - மிக்க மதம்பொழியும் இயல்புடைய, கருவி வீழத் தொடுகடா - தம்மேலிட்ட கருவிகள் வீழும்படி கையாற் றொட்டுச் சிதைக்குமியல்புடைய களிறுகளும்; வயிரத் தோட்டியுடையன - வயிரத் தோட்டியான் மட்டும் அடக்கப்படும் இயல்புடைய களிறுகளும், தொடர்கள் ஊன்ற - காலிலே சங்கிலிகளை யாத்தற்கு, விடுகொடா - விட்டுக் கொடாத இயல்புடையனவும், வியாளம் நிற்ப - நமது பட்டத்து யானையும் ஒழிய; வன்பணிகள் - வலிய செயல்களையும், மெல்லச் செய்யும் - அமைதியாகச் செய்யும் இயல்புடைய, படுகடாக்களிறும் - மதம்படு களிற்றியானைகளை (த் தேர்ந்துகொண்டு அவற்றை)யும், தேரும் புரவியும் - (அங்ஙனமே சிறந்த) தேர்களையும் குதிரைகளையும் ; பண்ணு கென்றான் - ஒப்பனை செய்க என்று பணித்தான், (எ - று.) சடிமன்னன் முதலியோரை எதிர்கொண்டழைக்கச் செல்வனவாகலின், சீலமற்ற களிறுகளை ஒழித்துச் சீலமுடைய களிறுகளையே பண்ணுறுத்துக என்றான் என்க. வியாளம் - பயாபதியின் பட்டத்து யானையின் பெயர். இதனைப் பின்னர்த் தான் புறப்படும்போது பண்ணுறுத்தல் வேண்டும் என்னும் கருத்தால் வியாளம் நிற்ப என்றான். களிற்றிற்குக் கூறியவிதனால் தேரும் புரவியும் சிறந்தவற்றையே ஆராய்ந்து பண்ணுறுத்துக என்றான் என்றும் கொள்க. |