பக்கம் : 597
 
குதிரையின் வருகை
915.

முற்றத்தா னெரியுஞ் செம்பொன் 1முகனணி கருவி சேர்த்திச்
சுற்றத்தா தணிந்து காமர் சூழ்மணிக் கோவை சூழ்ந்து
மற்றுத்தாம் வகுக்கற் பால மங்கல மரபிற் பண்ணிப்
பொற்றத்தார்க் கவரி வேய்ந்து 2போந்தன புரவி யெல்லாம்.
 

     (இ - ள்.) எரியும் செம்பொன் முகன் அணி கருவி சேர்த்தி - சுடர்வீசும் செவ்விய
பொன்னாலாகிய முகத்தில் அணியும் மரபினவாகிய கருவிகளை அணிந்து, சுற்றும் தாது
அணிந்து - உடல் முழுதும் மணமும் நிறமுமுடைய பொடிகளைத் தூவி, காமர் -
விருப்பஞ்செய்யும், மணிசூழ் கோவை - மணிகளாற் சூழப்பட்ட வடங்களை, சூழ்ந்து -
அணிந்து, மற்றும் தாம் வகுக்கற்பால முற்றத்தான் - மேலும் புரவிகளைப் பண்ணுறுத்தும்
மரபுடைய அணிகள் குறையாவாறு, மங்கல மரபில் பண்ணி - அழகிய முறையிலே
பண்செய்து, பொன் தத்து ஆர் கவரி வேய்ந்து - அழகிய அசைதல் பொருந்திய மயிர்க்
கற்றை சூட்டப்பெற்று, புரவி எல்லாம் போந்தன - குதிரைகள் எல்லாம் புறப்பட்டன, தாம்
இரண்டும் அசைகள்.

குதிரைகள், கருவி சேர்த்தித் தாதணிந்து, கோவை சூழ்ந்து பண்ணி, வேய்ந்து போந்தன
என்க.
 

( 89 )

மறவர் வருகை

916.

ஒட்டிய வூழி னன்றி யுயிர்கொள லொழிக வென்று
சுட்டினர் 3சொல்ப வாயிற் கூற்றமுந் துளங்கு நீரார்
கட்டிய கழலர் தாழ்ந்த கச்சையர் கனலும் வாளர்
மட்டுய ரலங்கல் சூடி வயவரும் வந்து சூழ்ந்தார்.
 

     (இ - ள்.) ஒட்டிய ஊழினன்றி - பொருந்திய ஊழ்வினையாற் கொள்வதல்லது,
உயிர்கொளல் ஒழிக என்று சுட்டினர் சொல்பவாயில் - பகைப்புலத்தே செய்யும் போரால்
எம்முயிர் கோடலைக் கருதுதல் ஒழிக என்று அவ்வீரர் தன்னைக் குறித்து அம்மறவர்கள்
கூறுமிடத்தே, கூற்றமும் துளங்கும் நீரார் - அதுகேட்டு அம்மறலியும் அஞ்சி நடுங்குதற்கு
ஏதுவாகிய மறத்தன்மையுடையார், கட்டிய கழலர் - வீரக்கழல் யாத்தவராய், தாழ்ந்த
கச்சையர் - தாழக்கட்டிய கச்சையுடையவராய், கனலும் வாளர் - சினக்கின்ற வாட்படை
ஏந்தியவராய், மட்டு உயர் அலங்கல் சூடி - தேன்மிக்க மாலைகளைப் புனைந்து கொண்டு,
வயவரும் வந்து சூழ்ந்தார் - காலாட்படை மறவரும் வந்து சூழ்ந்தனர், (எ - று.)
 


     (பாடம்) 1. முதனணி 2. பொருகின்ற 3. மொழிப