பக்கம் : 600
 

      (இ - ள்.) ஆண்டுற - ஓர் ஆண்டின் மேலும் இருந்து பழைதாகி இரைந்து ஒலித்து,
வேகித்து அழல்கின்ற - உண்பார்க்கு வேகமூட்டிச் சினக்கின்ற, மதுவின் தண்டோடு - கள்
நிறைக்கப்பட்ட மூங்கிற் குழாய்களோடு, ஈண்டி நின்று இன வண்டு ஆர்க்கும் இன்சுவை
நறவின்சாதி - வண்டினது கூட்டங்கள் நெருங்கி ஆரவாரிக்கும் இனிய சுவையுடைய
ஏனையகள் வகைகளும், வேண்டுநர் வேண்டுமாறு - விரும்பியவர்கள் தம் விருப்பப்படியே,
விருந்தயர்ந்துயரும் வண்ணம் - விருந்துண்டு மகிழ்ச்சியான் உயரும்படி, தீண்டரும் விஞ்சை
வேந்தன் - தொடுதற்கரிய விச்சாதர வேந்தனுடைய, திருநகர்ச் செறிக்க என்றான் - அழகிய
அரண்மனையிடத்தே நிரப்புக என்றான், (எ - று.)

     புதிய பானைகளில் நிரப்பி ஓராண்டு நிலத்திற் புதைக்கப்பட்ட ஒரு வகைக் கள்
மூங்கிற் குழாய்களில் அடைக்கப்படுதல் பண்டைக் கால வழக்கம். மதுவின் தண்டு - மது
நிறைக்கப்பட்ட மூங்கிற்குழாய்.
 

( 94 )

 
921.

தேங்கனி குழவித் தீநீர் செம்பழத் திரளின் கண்ணி
பாங்கமை 1பளிதச் சாதி பாசிலைத் தழையின் கற்றை
தீங்கழை கரும்பின் 2கட்டி திரணறைக் கடிகை யின்ன
தோங்கலந் திலாத சொல்லான் றொன்னகர்ச் சொரிக வென்றான்.
 

     (இ - ள்.) தேங்கனி - தெங்கங்கனிகளும், குழவித் தீநீர் - தெங்கிளநீர்க்
குரும்பைகளும், செம்பழத் திரள் - தேமா பலா வாழை முதலிய செவ்விய
பழக்குவியல்களும், இன் கண்ணி - இனிய மலர்க்கண்ணிகளும். பாங்கு அமை - பக்குவம்
அமைந்த, பளிதச் சாதி - கத்தூரி வகைகளும், பாசிலைத் தழையின் கற்றை -
வெற்றிலையாகிய தழைக்கற்றைகளும், தீங்கழைக் கரும்பின் கட்டி - இனிய கழியாகிய
கரும்பின் சாற்றாலாய கற்கண்டும், திரள் நறைக் கடிகை - திரண்ட சாதிக்காயும், இன்ன -
இன்னோரன்ன பிறவும், தோம் கலந்திலாத சொல்லான் - குற்றமற்ற வாய்மையாளனாகிய
சடிமன்னனுடைய, தொன்னகர் - அரண்மனையிடத்தே, சொரிக-கொட்டுக, என்றான்-என்று
பணித்தான், (எ-று.)

     தேங்கனி - முதிர்ந்த தேங்காய். குழவித்தீநீர் - இளநீர்க் குரும்பை. பாசிலைத் தழை
- வெற்றிலை. தொன்னகர் - திருநிலையகம். பழைதாகலின், அதன்கணமைந்த
அரண்மனையையும் தொன்னகர் என்றான்.
 

( 95 )

 

922.

கண்ணியுங் கமழுஞ் சூட்டுங் கற்றையாக் கட்டப் பட்ட
தண்ணிய மலருந் தாம மாலையுஞ் சதங்கை தம்மோ
டெண்ணிய வண்ண மாலை யெழினக ரெல்லை யெல்லாம்
விண்ணியல் விமான வீதி வெறிகொள மிடைவி வேலோய்.

     


     (பாடம்) 1. பளித்தச் சாதி 2. தேங்கட்டிரளரை