பக்கம் : 601
 

      (இ - ள்.) கண்ணியும் - முடிமாலையும், கமழும் சூட்டும் - மணங்கமழும்
கொண்டைமாலையும், கற்றையாக் கட்டப்பட்ட தண்ணிய மலரும் - கற்றையாகக் கட்டப்பட்ட
குளிர்ந்த பூஞ்செண்டும், தாம மாலையும் - தொடைமாலையும், சதங்கை தம்மொடு -
கிண்கிணி முதலிய சதங்கைகளோடு, எண்ணிய வண்ணமாலை - ஆராய்ந்தெடுத்த பன்னிற
மணிமாலையும், எழில் நகர் எல்லையெல்லாம் - அழகிய அரண்மனை வரைப்பகம் எங்கும்,
விண்ணியல் விமான வீதி - விமானங்கள் இயங்கும் விசும்பளவும், வெறிகொள - மணம்
கமழும்படி, மிடைவி - நிரப்புவாயாக !, வேலோய் - வேலையுடைய சித்திரதரனே !, (எ -
று.)

     தாமமாகிய மாலை என்க. மலர்களை நிரல்பட வைத்து வளைவின்றி நீளக் கட்டித்
தோளில் இடும் மாலை தாமம் என்ப. வண்ணமாலை - நவரத்தினமாலை. சூட்டு -
முடியைச்சுற்றி வளையமாகச் சூட்டும் மாலை.
 

( 96 )

 
923.

குங்குமக் குழம்பு கொட்டிச் சந்தனத் தொளிகண் கூட்டி
அங்கலுழ் விரையின் சேற்றோ டகநக ரளறு செய்து
மங்குலாய் விசும்பு மூட வகிற்புகை மயங்க மாட்டிப்
பொங்குபொற் சுண்ணம் வீசி மணவினை புனைவி யென்றான்.
 

     (இ - ள்.) அகநகர் - நமது போதன நகரத்தின் உள்ளிடத்தை, குங்குமக் குழம்பு
கொட்டி - குங்குமத்தாலாய செங்குழம்பைக் கொட்டி, சந்தனத் தொளி - சந்தனச்
சேற்றின்கண், கண்கூட்டி - கூட்டற்பாலவாய மணப்பொருள் பிறவும் கூட்டிக் கொட்டி,
அங்கலுழ் விரையின் சேற்றோடு - அழகிதாய் நெகிழ்ச்சியுடைய கலவைச் சாந்தும் கொட்டி,
அளறு செய்து - சேறாக்கி, மங்குல் ஆய் விசும்புமூட - முகில் போன்று நுண்ணிய வானம்
போர்க்கும்படி, அகிற்புகை மயங்க மாட்டி - அகிலாலாய மணப்புகையைப் பொருந்த ஊட்டி,
பொங்கு பொன் சுண்ணம் வீசி - மிகுந்த பொன்துகளைத் தூவி, இவ்வாற்றால், மணவினை
புனைவி என்றான் - திருமணம் நிகழ்த்துதற்கு வேண்டிய செயல்களைச் செய்வித்திடுக
என்றருளினான், (எ-று.)

     இதன்கண், போதன நகரத்தின் உள்ளே திவிட்டநம்பியின் திருமண விழாவிற்கு
வேண்டியவற்றைச் செய்க, எனப் பயாபதி கட்டளையிடுதல் கூறப்படுகின்றது.
 

( 97 )

பயாபதி விசயதிவிட்டர்களையும் தன்னோடு வருக எனல்

924.

அனையன வவனை 1யேவி யரசிளங் குமரர் தம்மைப்
புனைமலர்க் கண்ணி 2சூடிப் பொன்னெழி லாரந் தாங்கி
நனைகவுள் வேழ மேறி நம்மொடு வருக வென்றான்
கனைகுரன் முரச மார்க்கும் கடிபடைக் கால வேலான்.

     


     (பாடம்) 1. நீ போய். 2. சூட்டி