பட்டத்தைச் சேர்த்தி, கற்றையம் கவரிக் கண்ணி - கற்றையாகக் கட்டப்பட்ட அழகிய கவரிமானின் மயிராலாய சாமரைகளை, கருணமூலத்து வைத்தான் - செவியின் அடியிலே செருகிவைத்தான், (எ - று.) கடிகை - ஒரு பொன்மாலை. ஓடை - நெற்றிப் பட்டம். புளகச் சூழி - கண்ணாடிப் பட்டம். இஃது உச்சியிலிருந்து முகத்தே தொங்கவிடும் ஓரணி. மேலும் கடிகை பூட்டி. ஓடைசேர்த்தி, புளகம் வீழ்த்து, பட்டம் சேர்த்தி, கருணமூலத்துக் கவரிக் கற்றை வைத்தான் என்க. |
(இ - ள்.) தாரணி தயங்கச் சாத்தி - பூமாலைகளாகிய அணிகளைத் திகழும்படி சூட்டி, தவிசின் மேல் விரித்து - இருக்கையின் மேலே விரிக்கும் மரபினதாகிய துகிலை விரித்து, மஞ்சில் ஏரணி திருவில் ஏய்ப்ப - முகிலில் அழகுசெய்கின்ற இந்திர வில்லை ஒப்ப, இருவடம் இலங்க வீக்கி - இரண்டு பக்கங்களினும் நாலவிட்ட இரண்டு கயிறுகளைத் திகழுமாறு கட்டி, சீர் அணிமணிகள் வீழ்த்து - சிறந்த அழகிய யானை மணிகளையும் தூங்கவிட்டு, செம்பொன் செய் சுண்ணம் சிந்தி - செவ்விய பொன்துகளைத் தூவி, கார்அணி மின்னிற் றோன்ற - முகிலிடத்தே அழகு செய்யும் கொடி மின்னலைப் போன்று தோன்றும்படி, கதலிகை நடுவித்தான் - பொன் கொடியை நடும்படி செய்தான், ஆல் : அசை, (எ - று.) மாலைகள் அணிந்து இருக்கையின் மேல் விரிப்பினை விரித்து இருவடம் வீக்கி, யானை மணிகள் கட்டிச் சுண்ணம் அப்பிக் கொடி நடுவித்தான் என்க மணி - ஒலிக்கும் மணி என்க. |