பக்கம் : 607
 

      உலகத்தை ஓம்பும் மத்தளம் போன்று பருத்த தோள்களையுடையவனும் அழகிய
வெற்றிமாலையை அணிந்தவனுமாகிய பயாபதி மன்னன், வேந்தர் போற்று இசைப்ப ஏறி -
அரசர்கள் வாழ்த்துதலைச் செய்ய அரசுவாவின் மிசை ஏறி, சூழ் ஒளி ஆரம் மின்ன -
சூழ்கின்ற ஒளிமிக்க மணி வடங்கள் மிளிர, சுடர்க்குழை திருவில் வீச - சுடருகின்ற
குண்டலங்கள் அழகிய ஒளியை வீசாநிற்ப, ஏழையர் கவரியேந்த - மகளிர்கள்
சாமரையிரட்ட, எரிகதிர் விரிவதொத்தான் - ஒளிவீசுகின்ற ஞாயிற்றுமண்டிலம் ஒளி
விரித்துத் திகழ்தல் போன்று தோன்றினான், (எ - று.)

அவ்வாறு யானை ஒப்பனை செய்யப்பட்ட பின்னர்ப் பயாபதி போற்றிசைப்ப ஏறி ஏந்த
கதிர் விரிவ தொத்தான் என்க.
 

( 107 )

 
934.

ஒத்துநின் றுலக மெல்லா மொருங்குடன் குளிர வோம்பி
வித்தகர் புகழு மேரார் வெள்ளிவெண் குடையொன் றோங்கி
முத்தவெண் மாலை நான்று முடிமிசை நிழற்ற மூரி
மத்தமால் களிறு நுந்தி வளநகர் மருவச் சென்றான்.
 

     (இ - ள்.) ஒத்து நின்று - உலகத்தோடு ஒத்து நிற்றலைச் செய்து, உலகம் எல்லாம்
ஒருங்குடன் குளிர வோம்பி - உலகம் அனைத்தும் ஒருசேர இன்புறும்படி நீழல் செய்து,
வித்தகர் புகழும் ஏர் ஆர் - நுண்வினைக் கலைஞர்களால் பெரிதும் புகழப்படுகின்ற அழகு
பொருந்திய, வெள்ளி வெண்குடை ஒன்று - நனி வெண்மை நிறம் பொருந்திய திங்கட்குடை
ஒன்று, ஓங்கி வெண்மாலை நான்று முடிமிசை நிழற்ற - உயர்ந்து நின்று வெள்ளிய
மலராலும் முத்தாலும் ஆய மாலைகள் தூங்க பயாபதி வேந்தன் முடியின்மேல் நிழலைச்
செய்ய, மூரி மத்தம் மாகளிறு - பரியதும் மதமயக்குடையதும் ஆகிய கரிய அரசு வாவினை,
நுந்தி வளநகர் மருவச் சென்றான் - ஊர்ந்து வளவிய திருநிலையகத்தை எய்தும்
பொருட்டுச் செல்வானாயினான், (எ - று.)

    வளநகர் மருவச் சென்றான் - வளவிய நகரமாந்தர் தற்சூழச் சென்றான் எனினும் ஆம்.

     “கொடுத்தலும் இன்சொலும் ஆற்றின் அடுக்கிய
     சுற்றத்தாற் சுற்றப் படும்“ (திருக்குறள் - 525)
 
என்றும்,
     சுற்றத்தால் சுற்றப்பட வொழுகுதல்“ என்றும் உரைக்கப்ட்ட உபாயங்களாலே
உலகோம்பலின்,

     “ஒத்துநின் றுலக மெல்லாம் ஒருங்குடன் குளிர வோம்பி“

     என்றார். இவ்வுபாயங்களைத் “தானமும் சாமமும்“ என்பர் வட நூலோர். வேந்தன்
தொழில் குடைமேலேற்றிக் கூறப்பட்டன.
 

( 108 )