பக்கம் : 608
 
 
935.

அரசிறை யரசரொ டெழுதலு மதிர்தரு
முரசெறி யிமிழிசை முழவொடு கழுமின
திரைசெறி நெடுவரை கடைதொறு திசைதிசை
கரைசெறி கடலொலி கடுகிய தெனவே.
 

     (இ - ள்) அரசு இறை - அரசர்க்கு அரசனாகிய பயாபதி மன்னன், அரசரொடு
எழுதலும் - ஏனைய மன்னர்களோடு புறப்பட்டவுடனே, கரைசெறி கடல் - கரையகத்ததாகிய
பாற்கடலின், திரை - அலையின்கண், செறிநெடுவரை - இடப்பட்ட நீண்ட மந்தரமலை,
கடைதொறும் - சுழன்று கடைதலைச் செய்யுந் தோறும், திசைதிசை ஒலி கடுகியது என,
திசைகள்தோறும் ஒலிமிக்குப் பரவியதைப் போல, அதிர்தரும் முரசு எறி இமிழ் இசை -
முழங்குதலையுடைய முரசம் ஏற்றுதலால் எழுந்த ஓசை, முழவொடு கழுமின - மத்தள
வொலியோடு கலந்து, திசை திசை பரவிற்று, ஏ : அசை, (எ - று.)

     பயாபதி வேந்தன் சடிமன்னனை எதிர்கொள இவ்வாறு எழுந்துழி, கடல்கடைந்த
பொழுது எழுந்த பேரொலி போன்று முரசம் முதலியவற்றின் பேரொலி எழுந்தது என்க.
 

( 109 )

 

936.

துளைபடு குழலிசை துடியொடு சிறுபறை
கிளையொடு படலிகை கிளையொடு கிளர்தர
வளையொடு வயிரிசை மருவின மழையென
வளைபடு மணியர வறிவயர் வுறவே.
 

     (இ - ள்.) துளைபடு குழல் இசை - தொளைக்கப்பட்ட வேய்ங்குழலின் இனிய இசை,
கிளையொடு கிளர்தர - கிளையென்னும் செந்தமிழ்ப் பண்ணொடு பொருந்தி ஒலிக்கவும்,
துடியொடு சிறுபறை - துடி சிறுபறை முதலிய இசைக்கருவிகள், கிளையொடு -
தோற்கருவியாகிய தம்மினத்துடனே, மருவினகிளர்தர - பொருந்தி முழங்கினவாக,
படலிகை - கைத் தாளங்கள், கிளர்தர - ஒலிக்க, வளையொடு வயிரிசை மருவின கிளர்தர -
சங்குகளுடனே கொம்புகளின் இசை பொருந்திமுழங்கின, வளைபடு மணி அரவு அறிவு
மழையென அயர்வுற, ஏ - வளையின் அகத்ததாகிய மணிகளையுடைய பாம்புகள்
இம்முழக்கம் முகில் முழக்கமோ என அறிவு மயங்கும்படி, ஏ : அசை, (எ - று,)

கிளர்தர வென்பதை ஏற்றபெற்றி கூட்டுக. அவ்வழி குழல் முதலிய இன்னிசைக் கருவிகள்
இயம்பின, என்பதாம் கிளை-ஒரு பண். மணியரவு-மணியையுடைய பாம்பு; பேரொலியாகலின்
அரவு அறிவயர்வுற என்றார்.

( 110 )