பக்கம் : 61
 

அச்சுதம் (16) எனப் பதினாறென்பது சைனநூற் கொள்கை. ஒரு கற்பத்தில் அரசு வீற்றிருந்த
இருவரே விசயதிவிட்டர்களாகத் தோன்றினர் என்று தோலா மொழியார் கூறுகிறார். ஜம்பூத்
வீபத்தில் பரதகண்டத்தில் மகத நாட்டில் இராசகிருகம் என்னும் நகரத்தில் அரசனும்
இளவரசனுமாய்ச் செங்கோல் செலுத்தியவர்களும் சிற்றப்பனும் அண்ணன் மகனுமாகிய உறவு
முறையை முறையே உடையவர்களும் ஆகிய விசாகபூதி, விசுவநந்தி என்னும் அரசர்கள்,
ஸம்ப்ருத குருவினிடம் தருமங் கேட்டுத் தீக்கைபெற்று முனிவரானார்கள். சில காலஞ்
சென்ற பின்னர் அவ்வுடலை யொழித்து மகாசுக்கிரம் என்னும் கற்பத்தில் தேவர்களாய்
வாழ்ந்து, பிறகு நிலவுலகத்தில் விசய திவிட்டர்களாகப் பிறந்தார்களென்று ஸ்ரீபுராணம்
கூறுகிறது. அமரர் : அமிருதம் உண்டபடியினால் மரணம் இல்லாதவர். கற்பம் ஆண்டு -
கற்ப லோகத்தை அரசாட்சி செய்து; கற்பலோகமாகிய அங்கிருந்து எனினும் ஆம். திரைதல்
- மடிதல்; மடித்து மடித்து வீசுதலால் அலைக்குத் திரையென்னும் காரணப் பெயர்
உண்டாகியது. அங்கும் இங்கும் சென்று அலைதலை யுடையது அலை. வளை என்பது
சங்குக்கு உள்ளே வளைந்திருத்தலால் உண்டான காரணப்பெயர். விசயன் வெண்ணிறமும்
திவிட்டன் நீலநிறமும் உடையராதலின் “வாங்குநீர்த் திரைவளர் வளையு மக்கடல், ஓங்குநீர்
நிழலுமொத்தொளிரு மூர்த்தியார்“ என்றார். மாதர் இருவரும் மாண்புமிக்க மக்களைப்
பெற்றனராதலின் அவர் தம் வயிறு திருவென்னும் அடைபெற்றது.

( 1 )

மிகாபதி விசயனைப் பெறுதல்

71. பெண்ணிலாந் தகைப்பெருந் தேவி பேரமர்க்
கண்ணிலாங் களிவள ருவகை கைம்மிகத்
தண்ணிலா வுலகெலாந் தவழ்ந்து வான்கொள
வெண்ணிலாச் சுடரொளி 1விசயன் றோன்றினான்.
 
     (இ - ள்.) பெண்நிலாம் தகை-பெண் தன்மைக்குப் பொருந்திய நலங்கள் அமைந்த;
பெருந்தேவி - பயாபதி மன்னன் முதல் மனைவியான மிகாபதியினது; பேர்
அமர்க்கண்ணில்-பெரும்போர் செய்யவல்ல கண்களில்; ஆம்களிவளர் உவகை கைம்மிக -
மிகுந்த களிப்புண்டாதற்குக் காரணமான மகிழ்ச்சி சிறக்கும் உவகை மிகுதியாக; தண்நிலா -
குளிர்ந்த நிலவொளி; உலகு எலாம் தவழ்ந்து வான்கொள - நிலவுலகெங்கும் பரவித்
 

     (பாடம்) 1. விசையன்.