பக்கம் : 616
 

      பாற்கடலோடுவமித்தலால் பூவும் கவரியும் வெண்மையுடையன என்று கொள்க.
இருபடைகளும் கலந்த விடத்தே கவரிகள் நெருங்கி அசைதலால், திருப்பாற்கடல் விண்ணிற்
படர்ந்தாற் போன்று தோன்றிற் றென்க.
 

( 124 )

 
951.

கழுமிய முகிலொடு களிறு கான்மிடைந்
தொழுகிய வருவிநீ ருகுக்கு மாதலான்
மழைமுகின் 1மழகளி றென்னும் வேற்றுமை
உழையவ ருழையவர்க் குணர்த்தல் வேண்டுமே.
 

     (இ - ள்.) கழுமிய முகிலொடு களிறுகால்மிடைந்து - விண்ணின்கண் செறிந்த
மேகங்களோடு யானைகள் நெருங்கி, ஒழுகிய அருவிநீர் உகுக்கும் - ஒழுகும் இயல்பிற்றாய
அருவியைப் போல மிக்க மதநீரைப் பொழியா நிற்கும், ஆதலால் - அங்ஙனம் ஆதலால்,
மழைமுகில் மழகளிறு என்னும் வேற்றுமை - அங்கு நீர் பொழிந்தது முகிலோ அல்லது
யானைகளோ என்ற ஐயம் அகல்தற்குரிய வேற்றுமையை, உழையவர்க்கு உழையவர்
உணர்த்தல் வேண்டும் - ஆண்டு பக்கத்தே நிற்போர் ஒருவர்க்கொருவர் உண்மையுணர்ந்து
அறிவிக்கும் ஒரு பெற்றித்தா யிருந்தது, (எ - று.)

     மழை முகிலும் சடியின் மதயானையும் நெருங்கி மழைத்துளியையும் மதத்தையும்
பொழிந்ததனால், பொழிவது மழையோ மதநீரோ என அறிதல் இயலாதாயிற்றென்க.

( 125 )

 

952.

புண்ணிய மணிநிரை பரந்து பூவுதிர்ந்
தெண்ணியல் கொடிமிடைந் திருண்டு பாங்கெலாம்
கண்ணியல் கவரிமாக் கலந்து கானக
மண்ணியல் பரவையாய் வருவ தொக்குமே.
 

      (இ - ள்.) புண்ணியம் மணிநிரை பரந்து - முற்பிறப்புக்களிலே அறம் செய்வார்க்குக்
கிடைக்கும் இயல்பினவாகிய ஒன்பதுவகை மணிகளும் பரவிக் கிடப்பவும், பூவுதிர்ந்து -
மலர்கள் உதிரவும், எண்இயல் கொடிமிடைந்து - ஆராய்தற்கேற்ற பல்வேறு கொடிகள்
நெருங்கவும், இருண்டு - இருள் உண்டாகவும், கண்இயல் கவரிமா பாங்கெலாம் கலந்து -
பக்கமெங்கும் கண்ணழகுடைய கவரியும் விலங்குகளும் உடைத்தாய், கானகம் - பெருங்காடு,
மண்ணியல் பரவையாய் - மண்மேல் படர்ந்துவரும் ஒரு பரப்பையுடையதாய், வருவது
ஒக்கும் - இயங்குவதை ஒத்திருக்கும் அப்படை எழுச்சி, (எ - று.)


     (பாடம்) 1. மறை களி.