பக்கம் : 620
 

பயாபதி மன்னனும், சடிமன்னனும், சோதிட நூல் வல்லோர் உரைத்த நல்ல முழுத்தத்தில்
ஒருவரை ஒருவர் கண்டனர் என்க.
 

(132)

 

959.

அம்மல ரலங்கலான் றடக்கை யென்னுமம்
மொய்மலர்த் தாமரை முகிழ்க்கு மெல்லையுண்
மைம்மலர் நெடுவரை மன்னன் மற்றவன்
1செம்மல ரங்கையிற் செறியப் புல்லினான்.
 

     (இ - ள்.) அம்மலர் அலங்கலான் - அழகிய மலராலாய மாலையணிந்த பயாபதி
வேந்தனுடைய, தடக்கை என்னும் - பெரிய கைகள் என்று சொல்லப்படுகின்ற, அம்மொய்
மலர்த்தாமரை - அந்த இதழ்கள் செறிந்த தாமரை மலர்கள், முகிழ்க்கும் எல்லையுள் -
குவிகின்ற பொழுதினுள், மைமலர் நெடுவரை மன்னன் - முகில்கள் விரிதற்கு ஏதுவான
நெடிய மலையின் வேந்தனாகிய சடியரசன், மற்றவன் - அப்பயாபதி, செம்மலர் அங்கையில்
செறிய - தனது செந்தாமரை மலர்போன்ற அழகிய கைகளின் அகத்தே பொருந்துமாறு,
புல்லினான்-தழீஇக் கொண்டான், (எ-று.)

     பயாபதி வேந்தன் தன் கைகளைக் குவித்து வணங்கத் தொடங்கினா னாகச்
சடிமன்னன் அம்மன்னனைத் தன் மார்போடு பொருந்த அணைத்துப் புல்லினான் என்க.
 

( 133 )

 

960.

வலம்புரி வண்ணனு மகர மால்கட
னலம்புரி 2நல்லொளி நம்பி தானுமவ்
வுலம்புரி தோளினா னொனிகொள் பைங்கழற்
கலம்புரி தடக்கையாற் கதழக் கூப்பினார்.
 

     (இ - ள்.) வலம்புரி வண்ணனும் - வலம்புரிச்சங்கினை ஒத்த நிறமுடைய விசயனும்,
மகரமால்கடல் நலம்புரி நல்லொளி நம்பிதானும் - மகரமீனையுடைய கரிய கடல்போன்ற
நல்ல நீலவண்ணத்தையுடையவனும் நன்மையையே விழைகின்றவனும் ஆகிய திவிட்ட
நம்பியும், அவ்வுலம்புரி தோளினான் - அந்தத் திரள்கல்லை ஒத்த தோள்களையுடைய
சடிமன்னனது, ஒளிகொள் பைங்கழல் - ஒளியுடைய புதிய வீரக்கழல் அணிந்த திருவடிகளை,
கலம்புரி தடக்கையால் - அணிகலன்களும் விரும்புதற்குக் காரணமான வலிய கைகளை,
கதழ - விரைந்து, கூப்பினார் - குவித்துத்தொழுதார்கள், (எ - று.)

     விசயனும், திவிட்டநம்பியும், சடிமன்னனைக் காண்டலும் தம் கைமலர் குவித்துத்
தொழுதனர், என்க.
 

( 134 )

     (பாடம்) 1. செம்மலா லங்கையிற். 2. நிழலொளி.