பக்கம் : 622 | | சடிமன்னன் மகனாகிய அருக்ககீர்த்தி என்பான் பயாபதியின் திருவடிகளை வணங்கினான் என்க. | (136) | | 963. | ஆங்கவ னழகுகண் பருக மற்றவன் றாங்கெழு வனையதோ டழுவித் தன்னொடு மோங்கிய மழகளிற் 1றும்ப ரேற்றினான் வீங்கிய கனைகழல் வேந்தர் வேந்தனே. | (இ - ள்.) வீங்கிய கனைகழல் வேந்தர் வேந்தனே - மிக்க ஆரவாரத்தையுடைய வீரக்கழல் அணிந்த மன்னர் மன்னனாகிய பயாபதிவேந்தன், ஆங்கு அவன் அழகு கண் பருக - அவ்விடத்தே அவ்வருக்க கீர்த்தியி்ன் பேரழகைத் தன்னுடைய கண்கள் பருகா நிற்பவும், மற்றவன் - அவ்வருக்க கீர்த்தியினுடைய, தாங்குஎழு அனைய தோள் தழுவி - சுமையைத் தாங்குமியல்புடைய தூண்களை ஒத்த தோள்களைத் தழுவிக்கொண்டு, தன்னொடும் - தன்னுடனே, ஓங்கிய மழகளிற்று உம்பர் ஏற்றினான் - உயர்ந்த இளமையுடைய அரசுவாவின் எருத்தின் மேல் வீற்றிருக்குமாறு ஏற்றிக்கொண்டான், (எ - று.) அவ்வாறு வணங்கிய அருக்ககீர்த்தியின் அழகினைப் பருகுவான் போலப் பார்த்துப் பயாபதி வேந்தன், அவனைத் தன்னோடு அரசுவாவின் எருத்தத்தே ஏற்றிக் கொண்டான்; என்க. | ( 137 ) | | 964. | மன்னிய விஞ்சை வேந்தன் றம்பியு மருகன் றானுந் துன்னிய சுரமை நாடன் றொடுகழ றொழுத லோடும் பின்னிய ககதல் வெள்ளம் பெருகிய விரிவிற் றாகிப் பொன்னியல் 2கழலி னார்க்கோர் பொங்கொளி புணர்ந்த தன்றே. | (இ - ள்.) மன்னிய விஞ்சை வேந்தன் தம்பியும் - நிலைபேறுடைய சடிமன்னனுடைய தம்பியாகிய சுவனலதரனும், மருகன்றானும் - மருகனாகிய வியாக்கிரரதனும், துன்னிய சுரமை நாடன் - நெருங்கிய சுரமை நாட்டரசனாகிய பயாபதி மன்னனுடைய, தொடுகழல் தொழுதலோடும் - வீரக்ழல்கட்டிய அடிகளை வணங்கியவுடன், பின்னிய காதல் வெள்ளம் பெருகிய விரிவிற்றாகி - பிணைந்த அன்பாகிய வெள்ளம் மேலும் பெருகி விரிந்தவாற்றால், பொன் இயல் கழலினார்க்கு ஓர் பொங்கு ஒளிபுணர்ந்தது அன்றே - பொன்னாலியன்ற வீரக்கழல் அணிந்தவராகிய அவர்கட்கு, ஒப்பற்ற புதிய ஒளி மிகுந்து பொருந்துவதாயிற்று, அன்று, ஏ : அசைகள், (எ - று.) | |
| (பாடம்) 1. றெழுத்த மேறினான், றெருத்த மேற்றினான். 2. கழலி னாற்கோர். | | |
|
|