(இ - ள்.) திருந்து வேலோர் - திருத்தமுடைய வேற்படையுடைய மன்னர்கள், வெள்ளொளி எயிற்றுப் பேழ்வாய் விரியுளை அரசசீயம் - வெள்ளிய ஒளியை வீசும் பற்களையும் பெரிய வாயையும் விரிந்த பிடரி மயிரையும் உடைய அரச சிங்கத்தால், ஒள்ளொளி தவழ ஏந்தும் ஒளிமணி அணையின் மேலோர் - மிக்க ஒளிதவழுமாறு சுமக்கப்பட்டனவும் சுடரும் மணிகளாலிழைக்கப்பட்டனவும் ஆகிய அரியணைகளிலே ஏறி, கள் கமழும் ஒளிக்கோதை மகளிர்கள் - தேன்கமழும் ஒளியுடைய மலர்மாலை வேய்ந்த இளமகளிர்கள், கவரிவீச - சாமரையிரட்ட, தெள்ளொளிக் குமரரோடும் இருந்தனர் - தெளிந்த புகழையுடைய விசயதிவிட்டர்களுடனே அமர்ந்திருந்தனர், (எ - று.) தெளிந்த புகழாவது - உலகினரால் ஐயமறத் தெளிந்துகொள்ளப்பட்ட புகழ். சித்திரகூடத்தின்கண் பயாபதி சடி முதலியோர் தத்தமக்கியன்ற அரியணைகளிலே அமர்ந்திருந்தனர், என்க. |
(இ - ள்.) காமரு மகளிர் வீசும் - விருப்பத்தை உண்டாக்கும் இயல்புடைய மகளிர்களால் வீசப்பட்ட, களம் மணி - நீலநிறமுடைய மரகதமணி பதிக்கப்பட்ட, பவழத்திண்கால் - பவழத்தினாலியன்ற திண்ணிய காம்பினையுடைய, சாமரை பயந்த தென்றல் - வெண்சாமரை வீசுதலாலே எழுப்பப்பட்ட தென்றலை ஒத்த இனிமையுடைய காற்று, தகைமுடித் தாது சிந்த - தகுதியுடைய முடிமாலையின் பூந்துகளை உதிர்ப்பவும், பூமரு பொறிவண்டார்ப்ப - மலரின்கண் மேவுதலையுடைய புள்ளிகளைப் பொருந்திய வண்டுகள் ஆரவாரிப்பவும், பொலிந்து அவர் இருந்த போழ்தில் - அம்மன்னர்கள் பொலிவுடையவராக வீற்றிருந்த அமயத்தே, ஏமரு கடலந்தானை - செல்வம்மிக்க கடல்போலும் அழகிய படைகளையுடைய, இருநிலக்கிழவன் சொன்னான் - பெரிய நிலத்தைக் காவல் செய்பவனாகிய பயாபதி வேந்தன் சொல்வானாயினான், (எ - று.) ஏம் - செல்வம். மகளிர் வீசும் சாமரையின் காற்றாலே தம் மலர் மாலையின் பூந்துகள் பறக்குமாறும், வண்டுகள் ஆரவாரிக்குமாறும், அம் மன்னர்கள் வீற்றிருந்த அமயத்தே பயாபதி பின்வருமாறு பேசினன் என்க. |