பக்கம் : 626
 

பயாபதி சடிமன்னன் வருகையைப் போற்றல்

970.

விண்ணிடை யிழிந்து வந்த விண்ணவர் கிழவ னொப்பாய்
மண்ணிடை யென்னை யிங்கோர் பொருளென 1மதித்து வந்த
தெண்ணிடை யுணரு மாந்தர்க் கிடைதெரி வரிய தொன்றாற்
கண்ணிடை யுமிழுஞ் செந்தீக் கடாக்களிற் றுழவ வென்றான்.
 

     (இ - ள்.) கண்ணிடை உமிழும் செந்தீக் கடாக்களிற்று உழவ - கண்களிலே நெருப்புக்
காலும் சீற்றமிக்க ஆண் யானைகளாகிய ஏரால் பகைப்புலத்தை உழுகின்ற உழவனாகிய
விஞ்சை வேந்தே!, மண்ணிடை என்னை இங்கோர் பொருள் என மதித்து - மண்ணிடத்தே
வாழும் மனிதனாகிய என்னையும் ஒரு பொருளாக மதித்து இவ்விடத்தே, விண்ணிடை
இழிந்துவந்த விண்ணவர் கிழவன் ஒப்பாய் - வானுலகத்தை நீத்து மண்ணுலகிற்கு வந்துள்ள
அமரர்கோமான் ஆகிய இந்திரனையே ஒப்பானவனே, வந்தது - நீ இவ்வாறு எளிவந்த
செயல், எண்ணிடையுணரும் மாந்தர்க்கு - கருத்திடைவைத்து ஆராய்வார்க்கு,
இடைதெரிவரியது ஒன்று - தக்கதோர் காரணம் காண்டல் அரியதொன்றாக இராநின்றது,
என்றான் - என்று விநயத்துடன் மொழிந்தான், (எ - று.)
வானுலகத்தினின்றும் வந்த இந்திரனை ஒப்பான நீ, மானிடனாகிய என்னை மதித்து,
இவ்வாறு எளிவந்தமைக்கு, என்பால் வைத்த அன்பே அன்றிப் பிறிதொரு காரணமில்லை
என்றான் என்க.
 

( 144 )
சடிமன்னன் பயாபதிக்குக் கூறுதல்
971.

ஏங்குநீர் வளாகங் காக்கு மிக்குவா மன்ன ரேறே
தூங்குநீர் மருத வேலிச் சுரமைநா டுடைய 2தோன்றா
லேங்குநீ ரமிர்தின் றீர்த்தஞ் சென்றனர் தெளித்த லன்றே
ஓங்குநீ ருலகந் தன்னு ளுயர்ந்தவர்க் குரிய தென்றான்.
 

     (இ - ள்.) ஏங்கு நீர் வளாகம் காக்கும் - முழங்குகின்ற கடலாற் சூழப்பட்ட நிலத்தைக்
காவல் செய்தலில் வல்லுநரான, இக்குவாமன்னர் ஏறே - இக்குவாகு என்னும் அரசன்
மரபின்வந்த மன்னர்களுட் சிறந்த அரிமாப்போன்றவனே!, நீர் தூங்குமருத வேலிச்
சுரமைநாடு உடைய தோன்றால்! - நீர்நிறைந்த மருத நிலத்தாற் சூழப்பட்ட சுரமை நாட்டை

 

     (பாடம்) 1. வருளி. 2. தோன்றல்.