(இ - ள்.) பொலம் கலம் புலம்ப - பொன் அணிகலன்கள் ஆரவாரிப்பவும், ஆயம்புடைநின்று போற்றுக் கூவ - தோழியர் பக்கத்தே சூழ்ந்துநின்று வாழ்த்துப் பாடவும், அலங்கலும் குழலும் தாழ - மலர்மாலையும் அளகக்கற்றையும் தாழ்ந்து தூங்கவும், அணி ஞிமிறு அரவம்செய்ய - அழகிய வண்டுகள் இசை பாடவும், இலங்கல் அம் கனகம் மாடத்து - அவ்விமானத்தின் கண்ணதாகிய விளங்கும் அழகிய பொன்னாலியன்ற மாடத்தில், எழுநிலை ஏறலுற்றாள் - ஏழாவதாகிய மேனிலை மாடத்தே ஏறுகின்ற அச்சுயம்பிரபை, விலங்கலின் குவடுசேரும் - பொன்மலையின் சிகரத்தே ஏறுதலையுற்ற, மெல்லியற்றோகை போல்வாள் - மெல்லிய தன்மையுடைய தோகைமயிலை ஒத்துத் தோன்றினாள், (எ - று.) கனகமாடம் என்றமையால் பொன்விலங்கல் என்க. பொன்னணிகலன் புலம்பவும், ஆயம் போற்றவும், அலங்கலும் குழலும் தாழவும், ஞிமிறு அரவம் செய்யவும் சுயம்பிரபை அவ்விமானத்தின் ஏழாம் நிலைமாடத்தே ஏறலுற்றாள் என்க. |