பக்கம் : 633
 

      பிற ஏதுக்கள் பெற்றுச் சிறப்புறுமாயின் அவ்விடத்தே, நிறை என்பது இல்லை -
நிறை என்று கூறப்படும் அச்செறிவு சிறிதும் இல்லையாய் ஒழியும்; இங்ஙனமாகலின்,
அரும்பெறல் இவளது உள்ளம் - பெண்மையாற் சிறந்து பெறற்கரிய பேறாகத்திகழும்
இச்சுயம்பிரபையின் உள்ளந்தானும், சென்று - நிறைகடந்து போய், நறைநின்று கமழும்
குஞ்சி நம்பிபால் - தேன்மணம் நிலைத்து நின்று கமழ்தலையுடைய தலைமயிரையுடைய
திவிட்டன்பால், பட்டது - பொருந்துவதாயிற்று, அன்றே : அசை, (எ - று.)

“சிறையு முண்டோ செழும்புனன் மிக்குழீஇ
நிறையு முண்டோ காமம் காழ்கொளின்“ (மணிமேகலை)

என்னும் அடிகளுடன் இச் செய்யுளை ஒப்புக் காண்க.
 

( 155 )

 
982..

கோணின்ற மதியம் போலக் குழைமுகஞ் சுடரக் கோட்டித்
தாணின்ற குவளைப் போதிற் றாதகங் குழைய மோந்து
வாணின்ற நெடுங்கண் காளை வடிவினுக் கிவர மற்றை
நாணின்று விலக்க நங்கை நடுவுநின் றுருகு கின்றாள்.
 

     (இ - ள்.) கோள்நின்ற மதியம்போலக் குழைமுகம் சுடரக்கோட்டி - ஒருபுடை
பாம்பாற் பற்றப்பட்டு நின்ற திங்கள் மண்டிலத்தை ஒத்த தோடுகளையுடைய தன்முகம்
ஒளிவிரிக்கும்படி நிலநோக்கி எருத்தம் வளைத்துநின்று, தாள்நின்ற குவளைப்போதில் -
நாளத்தோடிருந்ததொரு குவளைமலரை, தாது அகம்குழைய மோந்து - பூந்துகள் பொருந்திய
அதன் அகமலர் குழைந்து போமாறு மோந்து நிற்பாளாய், நங்கை - அச்சுயம் பிரபை,
வாள்நின்ற நெடுங்கண் காளைவடிவினுக்கு இவர - வாள்போன்ற தன் நெடிய கண்கள்
(அவனை எமக்குக் காட்டுக என்று அவன் எழில் காண விதுப்புற்றுப்) பாயாநிற்பவும்,
மற்றை நாண்நின்று விலக்க - (ஏடி நங்கை நீ ஏதிலான் பாற் செல்லவும் போதுமோ ? நில்
என) நாணம் இடைநின்று தடுப்பவும், நடுவுநின்று உருகுகின்றாள் - இவற்றிடையே நின்று
(மற்று என் செய்வாள் பாவம்) உள்ளம் உருகுவாளாயினாள், (எ - று.)

பின்னலுடைய தலை, இராகுவாற் பற்றப்பட்டிருந்த திங்கட்குவமை. கோள் - ஈண்டு இராகு.
தன் உள்ளத்தே சடுதியிற் றோன்றிய நாணத்தாலே தலைகுனிந்தாள் என்க. குனிந்தவளைக்
கண்கள் காட்டுதி என்று வருத்த நாணம், காணற்க எனத் தடுக்கவும் இடைநின்று
வருந்தினள் என்க.

“காமமும் நாணும் உயிர்காவாத் தூங்குமென்
நோனா வுடம்பி னகத்து“ (திருக்குறள் - 1163)
என்னும் குறளையும் நோக்குக.
 

( 156 )