பக்கம் : 634
 
 
983.

அவ்வழி யமுதம் பூத்த வருங்கலக் 1கொம்பைத் தங்கோ
னிவ்வழி வருக வென்ற தவடம ரிசைப்பக் கேட்டு
மைவழி நெடுங்க ணாளு 2மனம்புக்க குரிசி றன்னைச்
செவ்வழி மழலை நாணே யெழினியா மறைத்துச் சென்றாள்.
 

     (இ - ள்.) அவ்வழி - அவ்வாறு நிகழும்போது, அமிழ்தம் பூத்த அருங்கலம் கொம்பை
- நற்குணமாகிய அமிழ்தம் நிறைந்த பெறற்கரிய கலத்தையும் பூங்கொம்பையும் ஒத்தவளாகிய
சுயம்பிரபையை, தங்கோன் இவ்வழி வருக என்றது - தம்மரசனாகிய சடி, இங்கு வருவாளாக
என்று பணித்தருளியதை, அவள் தமர் இசைப்பக் கேட்டு - அவள் தோழியர் கூறக்கேட்டு,
மைவழி நெடுங்கணாளும் - மை தீட்டப்பட்ட நீண்ட கண்களையுடையவளும், செவ்வழி
மழலை - செவ்வழி என்னும் பண்போன்றினிய மழலையை மிழற்றுகின்றவளும் ஆகிய
சுயம்பிரபை, மனம் புக்க குரிசில் தன்னை - தன்மனத்தே புக்குக் குடிகொண்ட திவிட்டனை,
நாணே எழினியா மறைத்து - தன் நாணம் என்னும் பண்பே திசைச்சீலையாகக் கொண்டு
பிறர் அறிவுறாவகை மறைத்து, சென்றாள் - அங்குச் செல்வாளாயினாள், (எ - று.)

திவிட்டனை மறைத்தென்றது - திவிட்டனால் நிகழ்ந்த தன் நிறையழிதல் முதலியவற்றைப்
பிறர் அறியாவகை மறைத்து என்றபடி.
 

( 157 )

சுயம்பிரபை தந்தையை வணங்கி நிற்றல்

984.

ஆயிரங் கண்ணி லாதார்க் கழகுகாண் பரிய நங்கை
வேயிரும் பணைமென் 3றோளார் மெல்லடி பரவச் சென்று
மாயிருஞ் செல்வத் தாதை மலரடி வணங்கி நின்றாள்
சேயிருங் குன்ற மீன்ற செழுமணிச் சலாகை போல்வாள்.
 

     (இ - ள்.) சேய் இருங்குன்றம் ஈன்ற செழுமணிச்சலாகை போல்வாள் - சிவந்த பெரிய
மலையிற் றோன்றிய செழித்த மணியாலியன்ற கொம்பு போன்றவளும், ஆயிரங்
கண்ணிலாதார்க்கு அழகு காண்பரிய நங்கை - அமரர்கோனை ஒப்ப
ஆயிரங்கண்ணுளார்க்கன்றிப் பிறர்க்குத் தன் அழகு முழுதும் காண்டற்கரியளாயவளும்
ஆகிய சுயம்பிரபை, வேயிரும் பணைமென்தோளார் - மூங்கில் போன்று பரிய பணைத்த
மெல்லியற்றோளையுடைய மகளிர்கள், மெல்லடி பரவச்சென்று - தன் மெல்லிய
திருவடிகளை ஏத்தெடுப்ப நடந்து, மாஇருஞ் செல்வத்தாதை - மிகப்பெருஞ் செல்வமுடைய
தன் தந்தையின், மலர் அடி வணங்கி நின்றாள் - தாமரை மலர் போன்ற திருவடிகளிலே
வணங்கி நிற்பாளாயினாள், (எ - று.)
 

 

     (பாடம்) 1. கொம்பு தங்கோன். 2. மனம்புகக். 3. றோளோர்.