பக்கம் : 636
 

      (இ - ள்.) மருமகள் வணங்க முன்னே தன் மருகியாகிய சுயம்பிரபை தன்
திருவடிகளிலே வணங்கினாளாக அவள் வணங்குதற்கு முன்னரே, வலப்புடைக்
குறங்கினேற்றி - பயாபதி வேந்தன் அச்சுயம்பிரபையைத் தன்னுடைய வலப்பக்கத்துத்
தொடையின்கண் ஏறியிருக்கும்படி செய்து, கருமைகொள் குவளைக் கண்ணி - கரியநிறம்
பொருந்திய குவளைமலரை ஒத்த கண்ணையுடைய சுயம்பிரபையின், கழிநலக்கதிர்ப்பு -
மிக்க எழிலினது விளைவினை, நோக்கி - நன்கு உற்றுப்பார்த்து, திருமகளிவளைச் சேரும்
செய்தவம் உடைய காளை - திருமகளாகிய இச்சுயம்பிரபையை மனைக்கிழத்தியாகப்
பெறுதற்கு மனம் முதலியவற்றை அடக்கிச் செய்தற்குரிய நோன்பினைச் செய்துடைய
திவிட்டநம்பி, அருமைகொள் திகிரி - பெறற்கரிய இந்நிலவலயத்தை, ஆள்தற்கு ஐயம்
ஒன்று இல்லை என்றான் - ஒரே குடையின் கீழ் ஆள்வதும் திண்ணமே அதற்கு ஒரு
சிறிதும் ஐயமின்று என்றான், (எ - று.)

திருமகளைப் பெற்றவன் வையம் ஆளுதல் இயல்பாகலின் ஆள்தற்கு ஐயமொன்றில்லை
என்றான் என்க. கதிர்ப்பு - மிகுதி.
 

( 160 )

இதுவுமது
987..

அருங்கல மகளிர்க் கேற்ற வழகெலாந் தொகுத்து மற்றோ
ரிருங்கலி யுலகங் காணப் படைத்தவ னியற்றி னான்கொ
1லொருங்கலர்ந் துலகின் மிக்க 2மகளிர துருவ மெல்லாம்
பெருங்கல வல்கு றன்பாற் புகுந்துகொல் 3பெயர்த்த தென்றான்.
 

     (இ - ள்.) அருங்கல மகளிர்க்கு ஏற்ற - பெறற்கரிய அணிகலன்களையுடைய
மகளிர்களுக்குப் பொருந்திய, அழகெலாம் - புற அழகும் அக அழகும் ஆகிய
எல்லாவற்றையும், தொகுத்து - ஒரு சேரக் கூட்டி, இருங்கலி உலகம் மற்றோர் காண -
பெரிய ஆரவாரத்தையுடைய உலகின்கண் உள்ள ஏனையோர் கண்டு மகிழும் பொருட்டு,
படைத்தவன் - படைப்புக்கடவுள், இயற்றினான் கொல் - இச்சுயம்பிரபை என்பாளைப்
படைத்தனனோ!, உலகின் மிக்க மகளிரதுருவம் எல்லாம் - இப்பேருலகத்தே உயரிய உருவச்
சிறப்புவாய்ந்த மகளிர்களின் அழகனைத்தும், பெருங்கல அல்குல் தன்பால் -
பேரணிகலன்களை அணிந்த அல்குற்றடத்தையுடைய இச் சுயம்பிரபையினிடத்தேதான்,
புகுந்துகொல் பெயர்ந்தது என்றான் - முதலிற் சென்றெய்திப் பின்னர் ஏனையோரிடத்துச்
சென்றதாதல் வேண்டும் என்று இயம்பினான், (எ - று.)


     (பாடம்) 1. ஒருங்கல - ஒருங்கவந். 2. மகளிர்களு ருவ. 3. பெயர்த்த.