பக்கம் : 640
 

      (இ - ள்.) தேம்மிடை கா - தேன்செறிந்த பொழில்களையுடைய, கானல்வேலி - 
கடற்கரையின்கண் உள்ள, செழுமணற்குவாலும் - மிக்க மணற்குன்றுகளாதல், குன்றும் -
குறிஞ்சியிலுள்ள மலைகளாதல், பூமிடை தடமும் - மருதத்துள்ள பூக்கள் செறிந்த
குளங்களாதல், காவும் - முல்லையிலுள்ள பூம்பொழில்களாதல், காமுடை மனத்தினார்
புக்கவர்க்கு - காமநோய் மிக்க மனத்தையுடையராய் அந்நோய் தணிக்கக்
கருதிச்சென்றார்க்கு, அரணம் ஆகா - அவை அவர்நோய் தீர்த்துக் காக்கும் மருந்துகள்
ஆகமாட்டா, தாம் உடை மனமும் கண்ணும் - மேலும் அந்நோய் கொண்டார்க்கு
அவருடைய மனமும் கண்களும், நிறைவும் - நிறையென்னும் பண்புமே, தம்பால ஆகா -
அவர் பகுதியினின்று அவர் விருப்பப்படி இயங்கமாட்டா எனின், காமுடை மனத்தினார்க்கு
- அக்காமநோய் செறிந்த மனமுடையார்க்கு, யாருளர் களைகண் ஆவார் - பிறர் அவர்
இடுக்கண் களைந்து அவரை உய்யக் கொள்வார் யாரேயுளர், (எ - று.)

“ஊருள் எழுந்த உருகெழு செந்தீக்கு
நீருட் குளித்து முயலாகும் - நீருட்
குளிப்பினும் காமம் சுடுமேகுன் றேறி
ஒளிப்பினும் காமம் சுடும்“ (நாலடி - 90)

என்னும் இச்செய்யுளோடு இதனை ஒப்பிட்டுக் காண்க.
“துன்பத்திற் கியாரே துணையாவார் தாமுடைய
நெஞ்சந் துணையல் வழி“ என்பது குறள் (1299)
 

( 166 )

சுயம்பிரபையைக் கண்டு வருமாறு
சசிதேவி மகளிரை உய்த்தல்
993.

அனையவ ளரச கன்னி யாகிய பொழுதி னிப்பாற்
புனைமல ரலங்கன் மார்பிற் பூமியங் கிழவன் றேவி
வனமல ருருவக் கண்ணி மணிவண்ணன் மார்பு தோயும்
கனமணிப் பூணி னாளைக் காண்கென விடுக்கப் பட்டார்.
 

     (இ - ள்.) அரசகன்னி - சுயம்பிரபை, அனையவள் ஆகிய பொழுதின் -
அத்தன்மையளாய்க் காமநோயால் வருந்தும்பொழுது, இப்பால் - இங்கே, புனைமலர்
அலங்கல் மார்பிற் பூமி அங்கிழவன் தேவி - புனைந்த மலர்மாலையணிந்த மார்பையுடைய
பயாபதி வேந்தனின் மனைவியாகிய சசிதேவி என்பாளால், வனம் மலர் உருவக்கண்ணி -
தண்ணீரிற்றோன்றும் தாமரை மலர் போன்ற அழகுடைய கண்களையுடையவளும்,
மணிவண்ணன் - திவிட்ட நம்பியினுடைய, மார்புதோயும் பூணினாளை - மார்பகத்தே
பொருந்தும் உரிமையுடையவளும் அணிகலன்களை அணிந்தவளுமாகிய சுயம்பிரபையை,
காண்கென விடுக்கப்பட்டார் - சென்று காணுங்கோள் என்று ஏவப்பட்ட மகளிர்கள், (எ -
று.)