பக்கம் : 642
 

      (இ - ள்.) மாதவக் குலத்துளார்கள் - பெருமைமிக்க தவப்பள்ளியிலே
வதிபவர்களாகிய, மாதவசேனை யுள்ளிட்டு - மாதவ சேனை என்பாளை யுள்ளிட்டு, ஓதிய -
கூறப்பட்ட, பெயரின் மிக்கார் - சிறப்புப் பெயர்களையுடையோரும், உலகறி கலையின்
வல்லார் - சான்றோர்களால் அறிவதற்குரிய கலைகளிலே வல்லுநரும் ஆகிய
ஆரியாங்கனையாரோடும், கோதையும் குழையும் தோடும் குளிர்முத்த வடமும் தாங்கி -
மலர்மாலைகளும் தோடுகளும் தண்ணிய நித்திலக்கோவைகளும் (சுயம்பிரபைக்குப்
பரிசினிமித்தம்) ஏந்தியவராய், போதிவர்குழலி தாதை - மலர்துதைந்த அளகத்தையுடைய
சுயம்பிரபையின் தந்தையாகிய சடிமன்னனின், பொன்னகர் முன்னினார் - அழகிய
அரணிமனையை எய்தினார்கள், (எ - று.)

தவ வொழுக்கமுடைய மாதவசேனை முதலிய மகளிரோடே, மதுகரி வயந்தசேனை முதலிய
மகளிரும், சுயம்பிரபையைக் காண வந்தோர் சடியின் கோயில் எய்தினார், என்க.
 

( 169 )

 
996.

நன்னுத லவரு நம்பி தாயரு 1நடையிற் றூய
பொன்னுதற் பிடியுந் தேரும் வையமு மிழிந்து புக்கு
மன்னனை வணங்கி 2யன்னோன் பணிகொண்டு மடந்தை கோயில்
இன்னிசை மகளிர் முன்சென் றெதிர்கொள வெய்தி னாரே.
 

     (இ - ள்.) நன்னுதல் அவரும் - இங்குக் கூறிய நல்ல நெற்றியையுடைய இரு
வேறுவகை மகளிர்களும், நம்பி தாயரும் - திவிட்டனுடைய செவிலித்தாயரும், தூயநடையிற்
பொன்நுதல் பிடியும் தேரும் வையமும் - நல்ல நடையுடைமையாற் சிறந்த அழகிய
நுதலையுடைய பெண் யானைகள் தேர்கள் பண்டிகள் முதலிய ஊர்திகளினின்றும்,
இழிந்துபுக்கு - இறங்கி அவ்வரண்மனையினுட் புகுந்து, மன்னனை வணங்கி - சடிமன்னனை
வணக்கம் செய்து, அன்னோன் பணிகொண்டு - அவன் கட்டளையை மேற்கொண்டு,
மடந்தை கோயில் - சுயம்பிரபையினுடைய கன்னிமாடத்தை, இன் இசை மகளிர் முன்
சென்று எதிர்கொள - இனிய இசைபாடுதல்வல்ல மகளிர்கள் வந்து தம்மை எதிர்கொண்டு
அழைத்துக்செல்ல, எய்தினார் - அடைந்தார்கள், (எ - று.)
அம் மகளிர்கள் ஊர்தியினின்றும் இழிந்து கோயிலுட் புக்கு, அரசன் அருள்பெற்றுப்
பின்னர், மடந்தை கோயிலிலே இன்னிசை மகளிர் எதிர்கொளப் புக்கார் என்க.

( 170 )

     (பாடம்) 1. நடக்கவல்ல. 2. மன்னன்.